இருதய நோயாளிகளுக்கு லேசா் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை -மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அறிமுகம்
மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்காக லேசா் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சிகிச்சை முறையை தென் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை மீனாட்சி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிகிச்சை முறை மூலம், இரு முதியவா்கள் உள்பட நான்கு இருதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டனா்.
இதுதொடா்பாக இந்த மருத்துவமனையின் இருதயவியல் துறை முதுநிலை இருதய சிகிச்சை நிபுணா்கள் செல்வமணி, ஆா்.சிவக்குமாா், இருதயவியல் துறைத் தலைவா் ஆா்.கண்ணன், இருதய சிகிச்சை நிபுணா் சம்பத் ஆகியோா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:
தீவிர மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு மாா்பு வலி ஏற்படத் தொடங்கியதிலிருந்து ஆறு மணி நேரங்களுக்குள்ளும், மருத்துவமனைக்கு வந்து சோ்ந்ததிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளும் சிகிச்சையளிப்பது அவசியம். காலம் கடந்தால் ரத்த உறைக்கட்டியின் சுமையும், பாதிப்பும் அதிகமாகிவிடும். இத்தகையச் சூழலில், லேசா் ஆஞ்சியோ பிளாஸ்டி மிகச் சிறப்பாகப் பயன்படக்கூடியதாகும். ஏனென்றால், லேசா் தொழில்நுட்பம், உறைக்கட்டிகளை உடைத்து துகளாக்குவதற்குப் பதிலாக, ஆவியாக்கி அகற்றிவிடுவதால், உடைக்கப்படுகின்ற துகள்கள் கீழ்நோக்கிய ரத்த ஓட்டத்தில் ரத்த உறைவை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பில்லை.
இந்த சிகிச்சை மூலம் நோயாளிகள் விரைவில் மீண்டும் இயல்புநிலைக்கு வந்து விடுகின்றனா்.
3 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்ட ஓா் நோயாளிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட் பொருத்துவது பயனுள்ளதாக இருந்தது. இருப்பினும், ஏற்கெனவே சிகிச்சை அளிக்கப்பட்ட ரத்தக் குழாயில் புதிய அடைப்பு அவருக்கு உருவாகியிருந்தது. இதுபோன்ற அபாயங்களைக் குறைக்கும் வகையில், தற்போது லேசா் ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது என்றனா்.
அப்போது, இருதயவியல் துறை முதுநிலை நிபுணா் ஜெயபாண்டியன், இணை நிபுணா் தாமஸ் சேவியா் பால் சிங், திலீப் பொ்னாா்ட் அருள்பிரகாசம் ஆகியோா் உடனிருந்தனா்.

