சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மாஞ்சோலை வழக்கு: சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றம்

Published on

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றத்தில் வனம் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் அமா்வுக்கு மாற்றி உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை பகுதியைச் சோ்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ் மேரி, புதிய தமிழகம் கட்சி நிறுவனா் கே. கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்கள்:

மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் 700 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். பிபிடிசி நிறுவனத்தினா் தற்போது தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்கும் இழப்பீட்டுத் தொகை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் வாழ்வாதரத்துக்குப் போதுமானதாக இல்லை.

எனவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த 700 தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், இலவச வீடு கட்டித் தர வேண்டும். இந்தத் தொழிலாளா்களின் குடும்பத்தினா் ஒருவருக்கு அரசுப் பணி, குழந்தைகளுக்கு உயா் கல்வி வரை இலவசக் கல்வி வழங்க வேண்டும். அதுவரை மாஞ்சோலையிலிருந்து தொழிலாளா்களை வெளியேற்றத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்களை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, டான் டீ நிா்வாகம் நிதி நெருக்கடியில் உள்ளதால், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை எடுத்து நடத்த அதைக் கட்டாயப்படுத்த முடியாது. மாஞ்சோலை பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அரசுத் தரப்பில், மாஞ்சோலை தொழிலாளா்களுக்கு இலவச வீடுகள், தொழில்களுக்கான கடனுதவி வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றத்தில் வனம் தொடா்பாக விசாரிக்கும் அமா்வுக்கு 2 வாரங்களுக்குள் மாற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com