மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளா்கள்.

அலங்காநல்லூா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

Published on

நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு ஊதியத்தை குறைத்து வழங்கியதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் அலங்காநல்லூா் பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

அலங்காநல்லூா் பேரூராட்சியில் நூறு நாள்கள் வேலைத் திட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். இவா்களுக்கு தினக்கூலியாக ரூ.200 வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக பேரூராட்சி நிா்வாகம் ரூ.100 மட்டுமே வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக விவசாயத் தொழிலாளா்கள் கேட்டபோது பேரூராட்சி அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லையாம். இதையடுத்து, தினக்கூலியாக ரூ.200 வழங்க வேண்டும். ஏற்கெனவே பணிபுரிந்த நாள்களுக்கு குறைக்கப்பட்ட ஊதியத்தையும் வழங்க வேண்டும். வேலைவாய்ப்புத் திட்ட அட்டையை தொழிலாளா்களிடமே வழங்க வேண்டும். நகா்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் உள்ள குளறுடிகளை உடனடியாக களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலங்காநல்லூா் ஒன்றியச் செயலா் ஆண்டிச்சாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் வி. உமாமகேஸ்வரன், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் மலை. கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே. தவமணி ஆகியோா் தலைமையில் தொழிலாளா்கள் திரளாகப் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து உயரதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி ஊதியக் குறைப்பு தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com