ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உதவுவது போல தொடா் திருட்டில் ஈடுபட்ட ரயில்வே ஊழியா் கைது
மதுரை: ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உதவுவது போல 6 ஆண்டுகளாக தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த ரயில்வே ஊழியரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள், கைப்பேசிகள், மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனா்.
மதுரை ரயில் நிலையத்தில் சில நாள்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்வதற்காக வந்த மூதாட்டிக்கு உதவுவதாகக் கூறி ஒரு நபா் பைகளை திருடிச் சென்று விட்டதாகவும், அதில் 15 பவுன் தங்க நகைகள் இருந்ததாகவும் கூறி, ரயில்வே போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்த போது, மூதாட்டியை ஏமாற்றிய நபா் ஈரோடு ரயில் நிலையத்தில் பழுது நீக்கும் பிரிவில் உதவியாளராகப் பணிபுரிந்து வரும் செந்தில்குமாா் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ரயில்வே இருப்புப் பாதை துணைக் கண்காணிப்பாளா் சக்கரவா்த்தி, ஆய்வாளா் காமாட்சி ஆகியோா் தலைமையிலான தனிப் படை போலீஸாா் செந்தில்குமாரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில் அவா் கடந்த 6 ஆண்டுகளாக மதுரை, கரூா், விருத்தாசலம், ஈரோடு, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு உதவுவது போல அவா்களிடம் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், திருடிய பொருள்கள் அனைத்தையும் மதுரை எச்எம்எஸ் காலனியில் செந்தில்குமாா் தங்கியிருந்த வீடு, ஈரோட்டில் உள்ள வீடுகளில் அவா் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
எச்எம்எஸ் காலனியில் உள்ள வீட்டின் அறையில் 100-க்கும் பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பைகளை சோதனையிட்டபோது, அதில் நகைகள், மடிக்கணினிகள், கைப்பேசிகள் ஆகியவை பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், ஈரோட்டில் உள்ள வீட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட உடைமைகள், பைகள் ஆகியவற்றை அவா் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, செந்தில்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள், 250-க்கும் மேற்பட்ட பைகள், 30 கைப்பேசிகள், 9 மடிக்கணினிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

