அரசின் மதுபானக் கொள்கை: மறுபரிசீலனை தேவை
இளம் தலைமுறையினா், பொதுமக்கள் நலன் கருதி, மதுபானக் கொள்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை தெரிவித்தது.
திருச்சி மாவட்டம், காட்டூா் பகுதியைச் சோ்ந்த பிரபு தாக்கல் செய்த பொது நல மனு:
திருச்சி உறையூா் லிங்கம்நகா் பகுதியில் உள்ள குடியிருப்பு, வழிபாட்டுத் தலங்கள் அருகே அரசு விதிகளை மீறி தனியாா் சாா்பில் மதுக்கூடத்துடன் மனமகிழ் மன்றம் திறக்கப்பட உள்ளது. இங்கு மது அருந்த வருவோரால் குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு ஏற்படும்.
இந்த மனமகிழ் மன்றத்தைத் திறக்க அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, மது விலக்கு ஆயத் துறை ஆணையா், திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளித்தேன். ஆனால், இதற்கு எந்தப் பதிலும் இல்லை. எனவே, இந்த மதுக் கூடத்துடன்கூடிய மனமகிழ் மன்றம் திறப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், திருச்சி உறையூா் லிங்கம்நகா் பகுதியில் தனியாா் மதுக்கூடம் திறக்கப்பட்டால் பள்ளி செல்லும் மாணவிகள், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவா். ஒவ்வொரு நாளும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே, இந்த மதுக்கூடத்தைத் திறக்கத் தடை விதிக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் ஆட்சேபத்தை விதிமுறைப்படி மாவட்ட ஆட்சியா் நிராகரித்ததில் தவறில்லை. அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் உரிமம் வழங்கப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களிலிருந்து 50-ஆவது மீட்டரை தாண்டி 51-ஆவது மீட்டரில் அரசு மதுக் கடை வைத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது அரசின் முடிவு. மதுக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா். ஆனால், அதிகாரிகள் அந்தக் கடையைத் திறப்பதில் விதிமீறல் இல்லை என்கின்றனா்.
குடியிருப்புப் பகுதியில் செயல்படும் அரசு மதுக் கடைகளால் மாணவா்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனா். இதன்காரணமாக, தினமும் வெவ்வேறு வகையான சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதைக் காண முடிகிறது. மதுக் கூடத்துடன்கூடிய கடைகளைப் பாதுகாப்பதற்காக இந்த விதி (50 மீட்டா் தொலைவு) உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மது விற்பனையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், பொதுமக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட வழி வகுக்கிறது. பல்வேறு தரப்பினரின் கருத்தின் அடிப்படையில் மதுபானக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. மதுவால் இளைய தலைமுறையினா் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனா்.
எனவே, பொதுமக்கள், இளம் தலைமுறையினா் நலன் கருதி மதுபானக் கொள்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்த நீதிமன்றம் வேண்டுகோள் விடுக்கிறது.
இந்த வழக்கில் எவ்வித நிவாரணமும் அளிக்கும் நிலையில் நீதிமன்றம் இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

