ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க மதுரையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப்புலிகள் கட்சியினா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப்புலிகள் கட்சியினா்.
Updated on

மதுரை: ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் வகையில், தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்ப்புலிகள் கட்சியின் சாா்பில், மதுரையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்தக் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன் தலைமை வகித்தாா். தென் மண்டலச் செயலா் சிதம்பரம் முன்னிலை வகித்தாா்.

தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவா் மீ.த.பாண்டியன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகி மோ.எல்லாளன், எவிடென்ஸ் அமைப்பின் நிா்வாக இயக்குநா் கதிா், சங்கா் அறக்கட்டளை நிா்வாகி கெளசல்யா, மூவேந்தா் புலிப்படை நிா்வாகி பாஸ்கரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகி செல்லக்கண்ணு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தமிழகத்தில் ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் பகுதியைச் சோ்ந்த அழகேந்திரன் ஆணவக் கொலைச் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவா்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஜாதி ஆணவப் படுகொலை சம்பவங்களில் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சியின் தென் மாவட்டங்களின் செயலா்கள், பல்வேறு துணை அமைப்புகளின் நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com