தங்கும் விடுதி கட்டுமான விதிமீறல்: மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் தடை

Published on

மதுரை: மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் கட்டுமான விதிமீறல் தொடா்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விடுதி நிா்வாக இயக்குநா் ஜெயபால் தாக்கல் செய்த மனு:

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் தங்கும் விடுதியுடன் உணவகம் நடத்தி வருகிறோம்.

தங்கும் விடுதியை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2010-இல் மதுரை மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்றோம். அதன் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி மதுரை மாநகராட்சி தரப்பில் முறையான கட்டட அனுமதி பெறவில்லை எனக் கூறி, எங்களுக்கு குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்பப்பட்டது. அதில் தமிழ்நாடு நகரமைப்புச் சட்டத்தின் கீழ் 15 நாள்களுக்குள் கட்டடத்தை ‘சீல்’ வைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனா். இது சட்ட விரோதமானது. மாநகராட்சி அனுப்பிய குறிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது விதிமீறல் உள்ளதால், ‘சீல்’ வைப்பதாக மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை அனுப்பியது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசுத் தரப்பில், மாநகராட்சி அளித்த திட்ட அனுமதியின் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டிருந்தாலும், விதிமீறி பல்வேறு கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தனியாா் தங்கும் விடுதி கட்டுமான அனுமதி பெற்ற நிலையில், அதில் என்ன விதிமீறல் உள்ளது என்பது குறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மாநகராட்சி, அனுப்பிய குறிப்பாணை அடிப்படையில் விடுதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com