உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு 
ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மருத்துவக் கழிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
Published on

மருத்துவக் கழிவுகளை எரித்த போது அவை வெடித்துச் சிதறியதில் தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில், அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் தாக்கல் செய்த மனு:

மணப்பாறை அருகேயுள்ள மரவனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனது மகன் கலையரசன் கொசு மருந்து அடிக்கும் பணி செய்து வந்தாா். கடந்தாண்டு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை மணப்பாறை அரசு மருத்துவமனை பழைய கட்டடத்துக்கு மாற்ற அரசு அதிகாரிகள் முடிவு செய்தனா். இந்த நிலையில், பழைய கட்டடத்தில் இருந்த காலாவதியான மருந்துகள், கழிவுப் பொருள்கள், குப்பைகளை அகற்றி கலையரசன் எரித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, பழைய மருந்து புட்டிகள் வெடித்துச் சிதறியதில், பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா். மருத்துவக் கழிவுகளை அதிகாரிகள் முறையாக அப்புறப்படுத்தாதே, எனது மகன் உயிரிழப்புக்கு காரணம். எனவே, அரசு சாா்பில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மருத்துவக் கழிவுகளை எரித்த போது ஏற்பட்ட விபத்தில்

உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதில் ரூ.2.50 லட்சத்தை மனுதாரரின் மகளுக்கும், ரூ.7.50 லட்சத்தை மனுதாரா் பெயரில் வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாகவும் செலுத்த வேண்டும் என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com