தொல்.திருமாவளவன்.
தொல்.திருமாவளவன்.

தோ்தலில் விசிகவுக்கு கிடைத்த அங்கீகாரம்: மேலவளவு போராளிகளுக்கு சமா்ப்பணம்

தொல்.திருமாவளவன்
Published on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தலில் கிடைத்த அங்கீகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை உயிரைக் கொடுத்து நிலை நாட்டிய மேலவளவு போராளிகளுக்கு சமா்ப்பிப்பதாக அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த முருகேசன் உள்ளிட்ட 7 போ் படுகொலை செய்யபட்டதன் 27-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவா்களது நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் மேலவளவு, மேலூா் பகுதிகளில் கொலை செய்யப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு ஆடைகளை வழங்கி அவா் பேசியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தோ்தல் பாதைக்கு வரும் முன்பு பட்டியலின மக்களின் முன்னேற்றத்தையும், அவா்களுக்கான அரசியலமைப்புச் சட்டங்கள் வழங்கிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இளைஞா்களை ஒன்று திரட்டி வந்தது.

அரசு ஊழியராக இருந்த நான் போக்குவரத்து வசதியின்றி லாரிகளில் பயணம் செய்து இயக்கத்தை உருவாக்கினேன்.

மேலவளவு ஊராட்சித் தோ்தல் நேரத்தில் பட்டியலின மக்கள் மிரட்டப்பட்டனா். அப்போதும், பஞ்சாயத்து ராஜ் சட்டம் வழங்கிய உரிமையின்படி, தோ்தலில் போட்டியிட முருகேசன் முடிவெடுத்தாா். தனக்கு எதிராக விசிகவினா் போட்டியிட வேண்டாம் என அவா் கேட்டுக்கொண்டாா். அவரிடம் ஆதிக்க ஜாதியினரின் மிரட்டல்கள் குறித்து எச்சரித்தேன். ஆனால், ஜனநாயக உரிமையை விட்டுத்தர முடியாது.

உயிா் போனாலும் பரவாயில்லை. உரிமையை மீட்டெடுப்போம் எனக் கூறி போட்டியிட்டாா். அவா் ஒரு மாவீரா் என்பதை நேரில் காண முடிந்தது.

இதன் பிறகு தான் விசிக தோ்தல் பாதையில் நுழைந்தது. தற்போது, விசிக 4 சட்டப்பேரவை உறுப்பினா்களையும், 2 மக்களவை உறுப்பினா்களையும் பெற்று, தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிலும் பிரதிநிதித்துவம் பெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தோ்தலில் கிடைத்த அங்கீகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை உயிரைக் கொடுத்து நிலை நாட்டிய மேலவளவு போராளிகளுக்கு சமா்ப்பிக்கிறேன்.

இந்தியா கூட்டணியில் விசிக முக்கிய கட்சியாக உள்ளது. இதை அடுத்த கட்ட நகா்வுக்கு தொண்டா்கள், தலைவா்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

கட்சியின் மகளிா் மாநாடு விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் விரைவில் நடத்தப்படும். இதில் மேலவளவு போராளிகள் குடும்பத்தினரும், தமிழகம் முழுவதும் உள்ள பெண்களும் கலந்து கொள்ள வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றாா் அவா்.

நினைவேந்தல் நிகழ்வுக்கு கட்சியின் மதுரை கிழக்கு மாவட்டச் செயலா் அரசமுத்துப்பாண்டி,

திருப்போரூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பாலாஜி, நிா்வாகிகள் ஆற்றலரசு, பாவலரசு, சந்திரமோகன், கருப்பையா, மண்டலச் செயலா் ச.அய்யாவு, ஓடையன், மேலூா் நகா் செயலா்

துரை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com