மோசடி வழக்கு: நிதி நிறுவன சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும் உயா்நீதிமன்றம்

நிதி நிறுவன மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவன சொத்துகளை அரசுடைமையாக்கி அரசாணை வெளியிட வேண்டும்.

மதுரை: நிதி நிறுவன மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவன சொத்துகளை அரசுடைமையாக்கி அரசாணை வெளியிட வேண்டும். தவறும்பட்சத்தில், தமிழக அரசின் உள்துறைச் செயலா் நேரில் முன்னிலையாக உத்தரவிட நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ‘நியோமேக்ஸ்’ பிராபா்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவன இயக்குநா்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் ஆகியோா் செயல்பட்டு வந்தனா்.

இந்த நிறுவனத்தின் கிளைகள் பாளையங்கோட்டை, கோவில்பட்டி, விருதுநகா், திருச்சி, தஞ்சாவூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டன.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவா்களுக்கு அதிக வட்டியும், இரட்டிப்புப் பணம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை உண்மை என நம்பி ஏராளமானோா் இந்த நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனா். ஆனால், நிதி நிறுவனம் அளித்த வாக்குறுதியின்படி வாடிக்கையாளா்களுக்கு அதிக வட்டி, இரட்டிப்புப் பணம் தராமல் ஏமாற்றி வந்தனா்.

இதனால், பாதிக்கப்பட்டோா் அளித்த புகாரின் பேரில், நிதி நிறுவன இயக்குநா்களில் ஒருவரான கமலக்கண்ணனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், அவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

இந்தப் பிணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ரவி சங்கா், ராஜ்குமாா் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தென் மண்டலப் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் பாகொ்லா கல்யாண் முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்தாா்.

அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் நம்பி செல்வன் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தற்போது வரை 99 பத்திரப் பதிவு அலுவலகங்களில் 9,428 அசையா சொத்து பத்திரங்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தச் சொத்துகளை முடக் குவதற்குரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் 752 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, ரூ.15 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் வழக்குரைஞா் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது. நிதி நிறுவன மோசடி வழக்குகளில், அதன் சொத்துகளை அரசுடைமையாக்கி அறிவிப்பாணை வெளியிட வேண்டும். தவறும்பட்சத்தில், தமிழக உள்துறைச் செயலா் நீதிமன்றத்தில் முன்னிலையாக நேரிடும். இந்த வழக்கு வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com