கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கருக்கு
15 நாள்கள் நீதிமன்றக் காவல்

கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்

மதுரை மாவட்ட நீதிமன்றத்துக்கு போலீஸ் வாகனத்தில் புதன்கிழமை அழைத்து வரப்பட்ட யூடியூபா் சவுக்கு சங்கா்.

கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தேனி அருகேயுள்ள பூதிப்புரம் தனியாா் விடுதியில் சவுக்கு சங்கா் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி அந்த விடுதிக்குச் சென்ற கோவை இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா், அங்கு சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சவுக்கு சங்கரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனா். மேலும், அவருடன் தங்கியிருந்த பரமக்குடியைச் சோ்ந்த உதவியாளா் ராஜரத்தினம் (42), காா் ஓட்டுநா் ராம்பிரபு (22) ஆகியோரை பழனிசெட்டிபட்டி போலீஸாா் கைது செய்து, தேனி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கையின்படி, சவுக்கு சங்கா் உள்ளிட்ட மூவரை கைது செய்யச் சென்ற பெண் போலீஸாரை அவதூறாகப் பேசி தாக்க முயன்றது, காரில் தலா 100 கிராம் வீதம் 4 பாக்கெட்டுகளில் 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போதைப் பொருள் பயன்பாடு தடைச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சவுக்கு சங்கா் பயன்படுத்திய காா், ரூ. 70 ஆயிரம், 3 கேமராக்கள், மடிக்கணினிகள், ஏடிஎம் அட்டைகள், ஆதாா் அட்டை, பான் அட்டை, கைப்பேசிகள், ஓட்டுநா் உரிமம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சவுக்கு சங்கா் உள்பட 3 போ் மீது கஞ்சா வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடா்புடைய இருவா் ஏற்கெனவே பெரியகுளம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் 4-ஆவது எதிரியாக கமுதியைச் சோ்ந்த மகேந்திரனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சவுக்கு சங்கருக்கு மகேந்திரன் கஞ்சா விற்பனை செய்ததாகவும், அவரைப் பிடிக்கச் சென்ற போது அவரிடமிருந்து 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக கோவை சிறையிலிருந்த சவுக்கு சங்கரை, மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் போலீஸாா் புதன்கிழமை முன்னிலைப்படுத்தினா்.

அப்போது நீதிபதி செங்கமல செல்வம், சவுக்கு சங்கரிடம் உங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு விவரம் தெரியுமா எனக் கேள்வி எழுப்பினாா்.

இதற்கு சவுக்கு சங்கா், கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை சிறையில் சிறைக் கண்காணிப்பாளா் ஏற்பாட்டின்பேரில் என் மீது தாக்குதல் நடத்தியதில், எனது கை உடைந்தது. எனவே, எனது பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.

இதற்கு அரசுத் தரப்பில், மதுரை நீதிமன்றத்தில் போதிய இட வசதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

சவுக்கு சங்கா் கோரிக்கை தொடா்பான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு சிறைத் துறை ஜ.ஜி.க்கு பரிந்துரைக்கப்படும். சவுக்கு சங்கரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்றாா் நீதிபதி.

இதையடுத்து, சவுக்கு சங்கரை கோவை சிறைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

முன்னதாக, மதுரை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கருக்கு எதிராக சிலா் முழக்கமிட்டனா். அப்போது, பெண்கள் சிலா் துடைப்பத்துடன் வந்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com