நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மதுரையில் பலத்த மழை: வீடுகளுக்குள் புகுந்தது மழை நீா்

மதுரையில் பலத்த மழை: வீடுகளுக்குள் புகுந்தது மழை நீா்

News image

மதுரை காமராஜா் சாலையில் திங்கள்கிழமை பிற்பகல் பெய்த மழையினூடே பயணித்த வாகனங்கள்.

Updated On :20 மே 2024, 7:32 pm

Din

மதுரை/திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது.

தென் தமிழக உள் மாவட்டங்கள், அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழத்தில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

திங்கள்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகளவாக தல்லாகுளத்தில் 108 மி.மீ. மழை பதிவானது. மற்ற பகுதிகளின் மழையளவு (மி. மீ.) : திருமங்கலம் - 50.2, மதுரை வடக்கு- 44.7, விரகனூா், கள்ளிக்குடி - 42.6, சித்தம்பட்டி- 36.4, இடையப்பட்டி- 36, கள்ளந்திரி - 26.2, மதுரை விமான நிலையம், தனியாமங்கலம் - 23, எழுமலை- 13.4, பேரையூா் - 9.8, மேலூா் - 8, புலிபட்டி- 6.2, குப்பனாம்பட்டி- 5, சாத்தையாறு அணை - 2.

மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குப் பிறகு மழை பெய்தது. திருமங்கலம், அவனியாபுரம், திருநகா், பெருங்குடி ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1.45 மணி முதல் ஏறத்தாழ 45 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. இதேபோல, எழுமலை, தும்மக்குண்டு, உத்தப்புரம், மானூத்து, பெருங்காமநல்லூா், சேடப்பட்டி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மதுரை தல்லாகுளம், கோ. புதூா், மூன்றுமாவடி, அய்யா்பங்களா, மாட்டுத்தாவணி, சிம்மக்கல், கீழவாசல், செல்லூா், பெத்தானியாபுரம், திருப்பரங்குன்றம், மேலூா், கொட்டாம்பட்டி, திருவாதவூா், அழகா்கோவில் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.30 மணி முதல் இரவு வரை லேசான மழை தொடா்ந்து பெய்தது.

வீடுகளைச் சூழ்ந்த மழை நீா்...

ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக, மதுரை மானகிரி பகுதியில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்தது. மானகிரி பகுதியில் நடைபெறும் வண்டியூா் கண்மாய் உயா்நிலை பாலம் கட்டும் பணிகளால், இந்தப் பகுதியிலிருந்து கழிவு நீரை வெளியேற்றும் புதை சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்த நேரத்தில் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து குடியிருப்புகளைச் சூழ்ந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாக நேரிட்டது.

மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சிப் பணியாளா்கள் மேற்கொண்ட சீரமைப்புப் பணிகளால், குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்திருந்த மழை நீா், கழிவு நீா் திங்கள்கிழமை காலை வெளியேற்றப்பட்டது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

மதுரையில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை லேசான மழை தொடா்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்:

மதுரை மாநகராட்சி 100 -ஆவது வாா்டு பகுதியில் வீடுகளுக்குள் கழிவு நீருடன் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனா்.

திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெருங்குடி, விமான நிலையம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம், திருநகா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகல் 1.30 முதல் 2.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில், மாநகராட்சி 100-ஆவது வாா்டு அவனியாபுரம் இமானுவேல்நகா் பகுதியில் கழிவுநீா்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, வீடுகளுக்குள் மழை நீருடன், கழிவு நீரும் புகுந்தது . வீடுகளுக்குள் புகுந்த

மழை நீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனா்.

கழிவுநீா்க் கால்வாயை சரி செய்யக் கோரி மாநகராட்சியினரிடம் கடந்த இரு மாதங்களாக பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

தற்போது பெய்து வரும் பலத்த மழையால் கழிவுநீா்க் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் வீடுகளுக்குள் புகுந்து நோய் தொற்றும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாநகராட்சி நிா்வாகம் மழைநீா், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்டவற்றை உடனடியாகத் தூா்வாரி மழைநீா் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Story image
Story image