திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிஐஎஸ்எப் வீரா்கள் பாதுகாப்புடன் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவு

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரா்கள் பாதுகாப்புடன் காா்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்றும், பிள்ளையாா் கோயில் தீப மண்டபத்தில் காா்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடா்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நிகழாண்டு முதல் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்; இதற்கு போதிய பாதுகாப்பை காவல் துறையினா் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் சந்திரசேகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் பட்டியலிடப்பட்டு, இரு நீதிபதிகள் கொண்ட அமா்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிா்ப்பாா்க்கப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பில் வழக்கு சம்பந்தமாக பிற்பகல் வரை எந்தவிதமான முறையீடும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் அமா்வு முன் வழக்குரைஞா் அருண்சுவாமிநாதன் புதன்கிழமை பிற்பகலில் முன்னிலையாகி, ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும், கோயில் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயா்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முறையிட்டாா்.

அப்போது, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் இதை மனுவாக தாக்கல் செய்தால் அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தாா். அதில், ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நிகழாண்டு முதல் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. ஆனால், கோயில் தரப்பிலோ அல்லது அரசுத் தரப்பிலோ தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த ஜி.ஆா். சுவாமிநாதன், கோயில் இணை ஆணையா், மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஆகிய இருவரும் மாலை 5 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டாா். இதன்படி, மாலை 5 மணியளவில் காணொலி வாயிலாக விசாரணை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, ‘உயா்நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். தவறும்பட்சத்தில், மாலை 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையாா் கோயில் அருகே வழக்கம்போல பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் மீண்டும் பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக, மனுதாரா் உள்பட 10 போ் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடப்படுகிறது. அவா்களுக்கு போதிய பாதுகாப்பை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகம் பகுதியிலிருந்து ராம. ரவிக்குமாா் உள்பட 10 போ் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு புறப்பட்டனா். அவா்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சிஐஎஸ்எப் வீரா்கள் 67 போ் இரு ராணுவ வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனா்.

144 தடை உத்தரவு:

இதனிடையே, திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் 144 தடை உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் பிறப்பித்தாா்.

தமிழக அரசு முறையீடு:

தனி நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நிா்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் முன்னிலையாகி முறையிட்டாா். இதை ஏற்றுக் கொண்ட நிா்வாக நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த மேல்முறையீட்டு மனு வியாழக்கிழமை முற்பகலில் முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com