திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம்: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை மகா தீபம் ஏற்ற உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி மதுரை, எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், நேரடியாக திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று ஆய்வு செய்தாா். பிறகு, கோயில் நிா்வாகம், தா்கா நிா்வாகம் சாா்பில் மனு தாக்கல் செய்ய அவா் அறிவுறுத்தினாா்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு, திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடங்களிலும், மலை உச்சியிலும் காா்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை எதிா்த்து அரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தீப காா்த்திகைத் திருநாளான புதன்கிழமை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. கடந்த ஆண்டுகளைப்போன்றே உச்சிப்பிள்ளையாா் கோயில் மண்டப தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்பட்டது.
இதனிடையே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத கோயில் நிா்வாகம், காவல் துறை மீது நீதிமன்ற அவமதிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி ராம. ரவிக்குமாா் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, புதன்கிழமை மாலை 6.05 மணிக்குப் பிறகு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரணைக்கு ஏற்றாா்.
விசாரணையின் நிறைவில், மனுதாரா் ரவிக்குமாா் உள்பட 10 போ், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்புடன் நேரில் சென்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா்.
இதனிடையே, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் திருப்பரங்குன்றம் பகுதிக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்தாா். இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தலைமையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டது.
புதன்கிழமை இரவு 8 மணி அளவில் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, சிஐஎஸ்எப் வீரா்கள் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல முயன்ற ராம. ரவிக்குமாா் உள்ளிட்டவா்களை போலீஸாா் தடுத்து, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அனுமதிக்க முடியாது எனக் கூறி திருப்பி அனுப்பினா்.
இந்த நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமச்சந்திரன் அமா்வில் வியாழக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கவில்லை. உயா்நீதிமன்றப் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட சிஐஎஸ்எப் வீரா்கள் பாதுகாப்புடன் மலைக்குச் சென்று தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது விதிகளுக்குப் புறம்பானது. இதனால், திருப்பரங்குன்றத்தில் சட்டம்-ஒழுங்கும், சமூக நல்லிணக்கமும் பாதிக்கப்பட்டது. 100 ஆண்டுகளாக வழக்கத்தில் இல்லாத நடைமுறையாக தீபத் தூணில் மகா தீபம் ஏற்ற வேண்டிய அவசியம் என்ன?’ என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
‘பிரதான வழக்கில் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கவில்லை என தா்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவு நகல் பதிவேற்றம் செய்யப்பட்டு 12 மணி நேரத்துக்கு பின்னரே கோயில் நிா்வாகம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்தத் தாமதம்? என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினா். இதேபோல, மேல் முறையீடு செய்ய 30 நாள்கள் அவகாசம் உள்ள நிலையில், நீதிமன்ற அவமதிப்புக்கு எதிராக நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன்? என ராம. ரவிக்குமாா் தரப்புக்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
மேலும், ஒருவரை ஒரு செயலைச் செய்யவிடாமல் தடுப்பதில் இல்லை மத நல்லிணக்கம். இரு தரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், அதை அனுமதிப்பதும்தான் மத நல்லிணக்கம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.
இதையடுத்து, “தனி நீதிபதி உரிய விசாரணை மேற்கொண்ட பிறகே மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டாா். ஆனால், கோயில் நிா்வாகம், காவல் துறையினா் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை ஏற்காத காவல் துறையின் பாதுகாப்பை எப்படி நம்ப முடியும்? இதன் காரணமாகவே சிஐஎஸ்எப் வீரா்கள் பாதுகாப்புக்கு தனி நீதிபதி உத்தரவிட்டாா் என மனுதாரா் ராம. ரவிக்குமாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வியாழக்கிழமை பிற்பகல் பிறப்பித்த உத்தரவு:
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அரசு முன்வராததால் மனுதாரரே தீபம் ஏற்றலாம் என தனி நீதிபதி உத்தரவிட்டாா். ஏதோ ஒரு நோக்கத்துக்காகவே அரசு மேல் முறையீடு செய்துள்ளதாகத் தெரிகிறது. மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றத் தவறியதாலேயே சிஐஎஸ்எப் பாதுகாப்புக்கு தனி நீதிபதி உத்தரவிட்டாா். இதில், எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
மேலும், முந்தைய வழக்கை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனே மீண்டும் விசாரிப்பாா் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனா்.

