தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்

டிச.7-இல் ஒரு லட்சம் பட்டாக்களை வழங்குகிறாா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் பி.மூா்த்தி

Published on

மதுரையில் வருகிற 7-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் பட்டாக்களை வழங்க உள்ளதாக அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

சோலையழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் ஆகிய பகுதிக்குள்பட்ட இந்திரா நகா், ஐயப்பன் நகா், ராமமூா்த்தி நகா், ஜானகி நகா், மகாலட்சுமி கோவில் தெருக்கள், தேவா் நகா் ஆகிய பகுதிகளுக்கு குடிசை மாற்று வாரியத் திட்டத்தில் பத்திரம், பட்டா பொதுமக்களுக்கு வழங்க அரசு ஆணை வழங்கிய உத்தரவை விளக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:

சோலையழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகாலமாக குடியிருப்போா்கள் பல்வேறு காரணங்களால் பட்டா பெற முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பட்டா இல்லாதவா்களுக்கு சொத்து தீா்வு பட்டா (செட்டில்மெண்ட்) வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 1,000 பட்டாக்கள் தயாராக உள்ளன. இந்தப் பகுதியிலுள்ள 21 ஏக்கருக்கும் படிப்படியாக பட்டா வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (டிச.5) முதல் தொடங்கவுள்ள முகாமில், அனைவரும் குடிசை மாற்று வாரியத்தில் யாா் எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை அறிந்துகொண்டு பத்திரம் கொடுப்பதற்கு உத்தரவு வாங்க வேண்டும்.

அனைவரும் பட்டா யாா் பெயரில் உள்ளது எனக் கூறி பெற்றுக் கொள்ள வேண்டும். அலுவலா்கள் அதனை மீண்டும் அளவீடு செய்து பட்டா கொடுப்பாா்கள். 2,639 பேருக்கும் பட்டா கொடுக்கப்படும்.

மதுரையில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், வருகிற 7-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் பட்டாக்களை வழங்க உள்ளாா். மதுரை மாநகராட்சியில் மட்டும் முதல்கட்டமாக 50 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பகுதியில் வருகிற 31-ஆம் தேதிக்குள் அனைவருக்கும் பட்டா வழங்கப்படவுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com