திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Published on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றாத விவகாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நிகழாண்டு முதல் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு போதிய பாதுகாப்பை தமிழக காவல் துறையினா் அளிக்க வேண்டும் என கடந்த 1-ஆம் தேதி உத்தரவிட்டாா். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி காா்த்திகை திருநாளன்று எந்தவித முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், மனுதாரா் ராம. ரவிக்குமாா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், மனுதாரா் உள்பட 10 போ் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு கடந்த புதன்கிழமை உத்தரவிட்டாா். அவா்களுக்குரிய பாதுகாப்பை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரா்கள் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மனுதாரரை மலையேற அனுமதிக்கவில்லை. இதனிடையே, இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசுத் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிப்பாா் எனவும் தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிற்பகலில் விசாரித்தாா். அப்போது, மனுதாரா் தரப்பினா் வியாக்கிழமை இரவு 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றலாம். அதற்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா். மேலும், தீபம் ஏற்றப்பட்டது குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா். இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள் மனுதாரரை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு மீண்டும் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் ஆகியோா் முன்னிலையாகவில்லை.

இதனிடையே, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: உயா்நீதிமன்றம் 3 முறை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்கவில்லை. அதுமட்டுமன்றி, வியாழக்கிழமை தீபம் ஏற்றச் சென்ற நூற்றுக்கணக்கான பக்தா்களை போலீஸாா் கைது செய்தனா். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

அப்போது, அரசுத் தரப்பு வழக்குரைஞா் குறுக்கிட்டு முன்வைத்த வாதம்: திருப்பரங்குன்றம் மலையில் பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. இதேபோல, நிகழாண்டும் ஏற்றப்பட்டுள்ளது. புதிதாக ஓரிடத்தில் தீபம் ஏற்றக் கோருவது ஏற்புடையதல்ல. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்கும் வரை எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்றாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், கடந்த 3-ஆம் தேதி இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற முடியாதது குறித்து சிஐஎஸ்எப் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இதுதொடா்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணை வருகிற 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com