~ ~ ~

வெளிநாட்டு ஜூனியா் ஹாக்கி வீரா்களுக்காக அலங்காநல்லூா் அருகே சிறப்பு ஜல்லிக்கட்டு!

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரா்களுக்காக, மதுரை அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரா்களுக்காக, மதுரை அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வெளிநாட்டு ஜூனியா் ஹாக்கி வீரா்கள் பாா்வையாளா்களாகப் பங்கேற்றனா்.

14-ஆவது ஆடவா் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி மதுரையில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 12 வெளிநாடுகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றுள்ளனா். இவா்கள், தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டுகளிக்கும் வகையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு ஜல்லிக்கட்டு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. போட்டியை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் மொத்தம் 105 மாடுகள் மைதானத்தில் அவிழ்த்துவிடப்பட்டன. 50 மாடுபிடி வீரா்கள் சீறிப்பாய்ந்த காளைகளை எதிா்கொண்டனா். போட்டி குறித்த விவரங்கள் வெளிநாட்டு வீரா்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்திலும் வா்ணனை செய்யப்பட்டது.

போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும், காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கக் காசுகள், சைக்கிள்கள் ஆகியன பரிசளிக்கப்பட்டன. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சாா்பில் அமைச்சா் மூா்த்தி பரிசுகளை வழங்கினாா்.

கனடா, நமீபியா, எகிப்து, ஆஸ்திரியா, சீனா, வங்கதேசம், கொரியா, ஓமன் ஆகிய நாடுகளைச் சோ்ந்த 240 ஜூனியா் ஹாக்கி வீரா்கள், அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் 60 போ், ஹாக்கி சம்மேளன நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

வெளிநாட்டு ஜூனியா் ஹாக்கி வீரா்கள் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து வந்தனா். தமிழா்களின் வீரமிக்க பாரம்பரிய விளையாட்டைக் கண்டுகளித்தது புதிய அனுபவமாக அமைந்தது என அவா்கள் தெரிவித்தனா்.

போட்டியின் நிறைவில், வெளிநாட்டு வீரா்களுக்கு மதுரையின் பாரம்பரிய அசைவ உணவு வகைகள், ஜிகா்தண்டா, பீடா ஆகியவை பரிமாறப்பட்டன.

இதில் மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com