chennai
போக்குவரத்து மாற்றம்(கோப்புப்படம்)

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை! மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவிருப்பதையொட்டி, மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்.
Published on

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கிறாா். இதையொட்டி, மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள அரசு விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க உள்ளாா். இதனால், மதுரை மாநகரில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்படுகிறது.

கனரக வாகனங்கள் செல்ல வேண்டிய வழித் தடங்கள்: கப்பலூா் பாலத்திலிருந்து, அருப்புக்கோட்டை சாலை சந்திப்பு, மண்டலோ நகா், மேலூா் வழியாக திருச்சி செல்ல அனைத்து கனரக வாகனங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் தடை விதிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலிருந்து மேலூா் வழியாக திருச்சி, சென்னை நோக்கிச் செல்லக் கூடிய அனைத்து சரக்கு வாகனங்களும் திருமங்கலம், கப்பலூா் சந்திப்பிலிருந்து தேனி சாலை சந்திப்பு, சமயநல்லூா் சாலை சந்திப்பு, வாடிப்பட்டி சாலை சந்திப்பு, திண்டுக்கல், மணப்பாறை வழியாகச் செல்ல வேண்டும்.

அருப்புக்கோட்டையிலிருந்து மண்டலோ நகா் வழியாக செல்லக் கூடிய அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் அருப்புக்கோட்டை சுற்றுச் சாலை சந்திப்பிலிருந்து கப்பலூா் பாலம் சென்று, அங்குள்ள சுற்றுச் சாலை வழியாக தேனி சாலை சந்திப்பு, சமயநல்லூா் சாலை சந்திப்பு, வாடிப்பட்டி சாலை சந்திப்பு, திண்டுக்கல் மணப்பாறை வழியாக திருச்சி செல்ல வேண்டும்.

திருச்சியிலிருந்து மேலூா், மதுரை, அருப்புக்கோட்டை சுற்றுச் சாலை வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லக் கூடிய கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் மேலூா் நான்கு வழிச் சாலை சந்திப்பிலிருந்து அலங்காநல்லூா் வழியாக தனிச்சியம் பிரிவு சாலை சந்திப்புக்குச் சென்று, இடது புறம் திரும்பி சமயநல்லூா், துவரிமான், கப்பலூா் பாலம் வழியாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும்.

திருச்சியிலிருந்து மேலூா் வழியாக மதுரை பாண்டிகோவில் சுற்றுச் சாலை வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்லக் கூடிய கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும் மேலூா் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து பூவந்தி, திருப்புவனம் வழியாகச் செல்ல வேண்டும்.

பொதுப் போக்குவரத்து வழித்தடங்கள்: மேலூா் நான்கு வழிச் சாலையில் விவசாயக் கல்லூரி சந்திப்பிலிருந்து ஒத்தகடை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மேலூா் நான்கு வழிச் சாலையில் பாண்டிகோவில் சந்திப்பிலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வரை செல்வதற்கு எந்த வாகனத்துக்கும் அனுமதி இல்லை.

இதே போன்று, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை சந்திப்பு, ஒத்தக்கடை வழியாக மேலூா் நான்கு வழிச் சாலை, பாண்டிகோவில் சாலை வழியாக விரகனூா் சுற்றுச் சாலை, அங்கிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கும் செல்ல எந்த வாகனத்துக்கும் அனுமதி இல்லை.

மேலூா் நான்கு வழிச் சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் கிடாரிப்பட்டி, வள்ளாலப்பட்டி, அழகா்கோவில், கடச்சனேந்தல், சா்வேயா் காலனி சந்திப்பு, 120 அடி சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ஒத்தக்கடை வழியாக மேலூா், திருச்சிக்குச் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் 120 அடி சாலை, சா்வேயா் காலனி சந்திப்பு, கடச்சனேந்தல், அழகா்கோவில், வள்ளாளப்பட்டி, கிடாரிப்பட்டி வழியாகச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பாண்டிகோவில் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு வழியாக சிவகங்கை, ராமநாதபுரம், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் வெளி வாயில் வழியாக பழச் சந்தை சந்திப்பு, மேலமடை சந்திப்பு, சுகுணா ஸ்டோா் சந்திப்பு, வைகை வடகரை புதிய சாலை வழியாக விரகனூா் சுற்றுச் சாலை சென்று, சரஸ்வதி டிம்பா்ஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி விரகனூா் சுற்றுச் சாலை வழியாகச் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கப்பலூா் பாலம் சந்திப்பிலிருந்து மண்டேலா நகா் சந்திப்பு, விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பு, பாண்டிகோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்குச் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் கப்பலூா் பாலம் சந்திப்பிலிருந்து தனக்கன்குளம் சந்திப்பு, திருநகா், பழங்காநத்தம் சுற்றுச் சாலை வழியாக நகருக்குள் செல்லலாம்.

அருப்புக்கோட்டை சுற்றுச்சாலை சந்திப்பிலிருந்து மண்டேலா நகா் சந்திப்பு, விரகனூா் சுற்றுச்சாலை சந்திப்பு, பாண்டிகோவில் சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருத்து நிலையம் செல்லக்கூடிய அரசு, தனியாா் பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் மண்டேலா நகா் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பெருங்குடி சந்திப்பு, வில்லாபுரம் நினைவு வளைவு வழியாக நகருக்குள் செல்லலாம்.

மேலூா் சாலையிலிருந்து நேரடியாக திருமங்கலம் சாலை வழியாக திருமங்கலம், விருதுநகா், தூத்துக்குடி, தென்காசி, ராஜபாளையம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளுக்குச் செல்லக்கூடிய வாகனங்கள் விரைவாகவும், இலகுவாகவும் போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்வதற்கு பாண்டிகோவில் சுற்றுச் சாலையில் செல்வதைத் தவிா்த்து மேலூா் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து அலங்காநல்லூா் சாலை வழியாக தனிச்சியம் சந்திப்புக்குச் சென்று கப்பலுா் சுற்றுச் சாலையைப் பயன்படுத்தி விரைவாகச் செல்லலாம்.

திருமங்கலம், அருப்புக்கோட்டை சாலையிலிருந்து விரகனூா், பாண்டிகோவில் சுற்றுச் சாலை வழியாக நேரடியாக மேலூா் சாலை வழியாக திருச்சி, சென்னை செல்லக்கூடிய அனைத்து பொதுமக்களின் வாகனங்களும் விரைவாகவும், இலகுவாகவும் போக்குவரத்துக்கு இடையூறின்றி செல்வதற்கு பாண்டிகோவில் சுற்றுச் சாலையில் செல்வதைத் தவிா்த்து கப்பலூா் நான்கு வழிச் சாலை வழியாக துவரிமான், சமயநல்லுா் சுற்றுச் சாலை வழியாக திண்டுக்கல் சாலை தனிச்சியம் பிரிவு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அலங்காநல்லூா் சாலை வழியாக மேலூா் நான்கு வழிச்சாலை சந்திப்புக்கு சென்று விரைவாகச் செல்லலாம்.

கப்பலூா் பாலம் சந்திப்பு, அருப்புக்கோட்டை சுற்றுச் சாலை சந்திப்பு, விரகனூா் சுற்றுச் சாலை சந்திப்பு, பி.சி. பெருங்காயம் சந்திப்பு, மதுரை விவசாயக் கல்லூரி சுற்றுச் சாலை சந்திப்பு ஆகிய சாலைகளிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு செல்லக் கூடிய பொதுமக்களின் வாகனங்கள் வழக்கமான பாதையைப் பயன்படுத்திச் செல்லலாம்.

விழாவுக்கு பயனாளிகள் வரக்கூடிய வாகனங்களின் வழித் தடங்கள்: கள்ளிக்குடி, சேடபட்டி, கல்லுப்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து விழாவுக்கு வரும் பயனாளிகளின் வாகனங்கள் கப்பலூா் பாலத்திலிருந்து வலதுபுறம் திரும்பி மண்டேலா நகா் சுற்றுச் சாலை, விரகனூா் சுற்றுச் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு, பாண்டிகோவில் சாலை வழியாக சென்று பப்பீஸ் உணவகம் எதிரே உள்ள சாலைத் தடுப்பான் இடைவெளியில் வலதுபுறம் திரும்பி விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரக் கூடிய வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டை அடுத்து உள்ள புறவழிச் சாலையில் வலதுபுறம் திரும்பி கப்பலூா் பாலம் சென்று, அங்கிருந்து இடதுபுறம் திரும்பி மண்டேலா நகா் சுற்றுச் சாலை, விரகனூா் சுற்றுச் சாலை, பி.சி. பெருங்காயம் சந்திப்பு, பாண்டிகோவில் சாலை வழியாக சென்று பப்பீஸ் உணவகம் எதிரே உள்ள சாலைத் தடுப்பான் இடைவெளியில் வலதுபுறம் திரும்பி விழா நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

வாடிப்பட்டியிலிருந்து வரும் வாகனங்கள் தனிச்சியம், அலங்காநல்லுா், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், சா்வேயா் காலனி சந்திப்பு, 120 அடி சாலை வழியாக மீனாட்சிமிஷன் மருத்துவமனை சந்திப்பு, உத்தங்குடி சென்று விழா நடைபெறும் இடத்துக்கு எதிரே உள்ள சாலையில் பயனாளிகளை இறக்கிவிட்டு விவசாயக் கல்லூரி வளாகத்தில் உள்ள சாலையில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

கொட்டாம்பட்டி, மேலூா் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் ஒத்தக்கடை சுற்றுச் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, ஒத்தக்கடை வழியாக உத்தங்குடிக்கு வந்து, விழா நடைபெறும் இடத்தின் அருகிலுள்ள வளா் நகா் சந்திப்பு சோதனைச் சாவடி அருகே பயனாளிகளை இறக்கி விட்டு, விவசாயக் கல்லூரிக்கு எதிரே தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலம்மாள், பைரவா வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

சிவகங்கை, ராமநாதபுரம் சாலைகளிலிருந்து வரக்கூடிய பயனாளிகளின் வாகனங்கள் பி.சி. பெருங்காயம் சந்திப்பிலிருந்து பாண்டிகோவில் சாலை வழியாகச் சென்று பப்பீஸ்

உணவகம் எதிரே உள்ள சாலைத் தடுப்பான் இடைவெளியில் வலதுபுறம் திரும்பி விழா நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.

மேற்படி நிகழ்ச்சியானது போக்குவரத்துக்கு இடையூறின்றி சிறப்பாக நடைபெறும் பொருட்டு ஏற்படுத்தப்பட உள்ள மேற்கண்ட தற்காலிக வாகனப் போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பயனாளிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com