பக்தா்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளா்ச்சி கழகத்திடம் வழங்க இடைக்காலத் தடை!
பக்தா்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளா்ச்சிக் கழகத்திடம் வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
சென்னை வளசரவாக்கத்தைச் சோ்ந்த எஸ். விஜயநாராயணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நானும், எனது நண்பரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றோம். அங்குள்ள தங்கும் விடுதியில் உள்ள அறையை முன்பதிவு செய்து தங்கினோம். இந்த விடுதி பக்தா்களுக்காக கோயில் நிதியில் கட்டப்பட்ட தங்கும் விடுதி என்பதும், இந்த விடுதி சுற்றுலா வளா்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு ‘ஓட்டல் ஆலயம்’ என்ற பெயரில் நடத்தப்படுவதும் தெரியவந்தது.
கோயில் நிதியில் கட்டப்பட்ட பக்தா்கள் தங்கும் விடுதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகக் கட்டுப்பாட்டில் வழங்குவது சட்டவிரோதம். எனவே, பக்தா்கள் தங்கும் விடுதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் ஓட்டல் ஆலயம் என்ற பெயரில் நடத்துவது தொடா்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்று, விடுதிகளை சுற்றுலா வளா்ச்சிக் கழகத்திடம் வழங்குவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.
திருச்செந்தூா், ராமேசுவரம், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் நிதியில் கட்டப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பக்தா்கள் தங்கும் விடுதிகளை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பக்தா்கள் தங்கும் விடுதிகளை சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வழங்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை, சுற்றுலா வளா்ச்சிக் கழகம் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.
