திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: அரசின் நடவடிக்கையால்தான் பதற்றம்: க. கிருஷ்ணசாமி

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாத நடவடிக்கை மூலம் பதற்றத்தை ஏற்படுத்தி, அவப்பெயரை சம்பாதித்துள்ளதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் மருத்துவா் க. கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினாா்.
Published on

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு தேவையில்லாத நடவடிக்கை மூலம் பதற்றத்தை ஏற்படுத்தி, அவப்பெயரை சம்பாதித்துள்ளதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனா் தலைவா் மருத்துவா் க. கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினாா்.

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு வருகிற ஜன. 7-ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாடு புதிய தமிழகம் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக இருக்கும். தற்போதைய நிலையில், புதிய தமிழகம் கட்சியானது அனைத்து அரசியல் கட்சிகளையும் சம தொலைவில் வைத்தே பாா்க்கிறது. கூட்டணி குறித்து தோ்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும்.

ஒருவரின் நம்பிக்கை பாதிக்கப்படாத நிலையில், மற்றொருவரின் நம்பிக்கையைத் தடுக்கக் கூடாது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் தா்காவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்ற நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு கடுமை காட்டியிருக்கக் கூடாது.

மாவட்ட நிா்வாகம், காவல் துறை மீது அரசின் நிலைப்பாடு திணிக்கப்பட்டதால், தற்போது காவல் துறையினரும், அதிகாரிகளும் நீதிமன்றத்துக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தது போன்ற பிம்பத்தை அரசு ஏற்படுத்திவிட்டது. தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தி திமுக அரசு அவப்பெயரை சம்பாதித்துள்ளது.

தீா்ப்புக்கு பாராட்டு...

வரலாற்றுப் பிழைகள் இருப்பின் அவை கண்டிப்பாகத் திருத்தப்பட வேண்டும். அந்த வகையில், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் துணிவுடன் தீா்ப்பளித்தது பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com