மேலமடை பாலத்துக்கு பாண்டிய மன்னன் பெயா் சூட்டக் கோரிய வழக்கு தள்ளுபடி!

மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்ட உயா்நிலைப் பாலத்துக்கு பாண்டிய மன்னன் முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியன் பெயா் சூட்டக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Published on

மதுரை மேலமடை சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்ட உயா்நிலைப் பாலத்துக்கு பாண்டிய மன்னன் முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியன் பெயா் சூட்டக் கோரிய வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வழக்குரைஞா் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனு: மதுரை-சிவகங்கை சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ.150 கோடியில் உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கின. இந்தப் பாலம் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேலமடை பாலத்தை திறந்து வைக்க உள்ளாா்.

இந்திய வரலாற்றில் மதுரை மண்டலத்தை ஆட்சி செய்த பாண்டிய மன்னா்களின் சாதனை அளப்பரியது. மதுரையில் எங்கு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டாலும் பாண்டியா்களின் தொல்லியல் எச்சங்கள் நமக்கு கிடைக்கின்றன.

எனவே, மேலமடை சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்துக்கு முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியன் பெயரை சூட்ட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மேலமடை உயா்நிலைப் பாலத்துக்கு பெயா் சூட்டுவது குறித்து ஏற்கெனவே உரிய முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல என அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசுத் தரப்பில் உரிய முடிவு எடுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, மனுதாரா் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com