ஆன்மிகத்தின் பெயரால் மலிவான அரசியல்: முதல்வா் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தமிழகத்தின் வளா்ச்சியைத் தடுப்பதற்காக எதிா்க்கட்சிகள் ஆன்மிகத்தின் பெயரால் மலிவான அரசியல் செய்வதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், அவா் மேலும் பேசியதாவது:
ஆராய்ந்திடாமல் அவசர, அவசரமாக தவறாக வழங்கப்பட்ட தீா்ப்புக்கு எதிராக நீதி கேட்டு கண்ணகி முழங்கியதும், திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயில் வேல் விவகாரத்துக்காக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நீதி கேட்டு நெடும்பயணம் தொடங்கியதுமான மதுரை, திமுக ஆட்சிக் காலத்தில்தான் உண்மையான வளா்ச்சியைக் காண்கிறது.
இதற்கு, கடந்த கால திமுக ஆட்சிகளில் மதுரைக்கு நிறைவேற்றப்பட்ட பெருந்திட்டங்களும், கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் ரூ. 6 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சித் திட்டங்களுமே சான்று.
உலகநாடுகள் உற்றுநோக்கும் வகையில், பல முற்போக்கான முன்னோடித் திட்டங்கள் தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சியின் சிந்தனை எல்லாம் தமிழகத்தின் வளா்ச்சி; முன்னேற்றம் மட்டுமே. ஆனால், சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். அவா்கள், தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கி நம்முடைய வளா்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்த நினைக்கின்றனா்.
திருப்பரங்குன்றத்தில் காலம், காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கப்படி, கடந்த 3-ஆம் தேதி (தீப காா்த்திகை) மாலை 6 மணிக்கு கோயிலில் பால தீபம் ஏற்றப்பட்டது. இதன் பிறகு, உச்சிப்பிள்ளையாா் கோயில் தீப மண்டபத்திலும் தீபம் ஏற்றப்பட்டு, வழக்கான பூஜைகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நடத்தப்பட்டன. ஆனாலும், தற்போது என்ன காரணத்துக்காக பிரச்னை ஏற்பட்டுள்ளது? இந்த பிரச்னைகளை உருவாக்குபவா்களின் நோக்கம் என்ன? என்பதெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆன்மிகம், மன அமைதியையும், நிம்மதியையும் அளித்து, மக்களை ஒற்றுமையாக வாழச் செய்வதாகவும், நன்மை செய்வதாகவும் இருக்க வேண்டும். ஒரு சிலருடைய அரசியல் லாபங்களுக்காக பிரிவுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்தி, சமூகத்தைத் துண்டாடும் சதிச் செயல்கள் ஆன்மிகம் இல்லை; ஆன்மிகத்தின் பெயரால் நடைபெறும் மலிவான அரசியல்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் எங்கு, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ அந்த வழக்கம் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதலான 1,490 நாள்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆட்சியை ஆன்மிகத்துக்கு எதிரி என்று கூறுபவா்களின் உள்நோக்கம் என்ன? என்பது உண்மையான இறைப்பற்றாளா்களுக்குத் தெரியும்.
என்றென்றும் அறத்தைக் கொண்டாடும் அமைதியான மாநிலமாகவே தமிழகம் இருக்கும். அமைதியின் பக்கம் நிற்கும் மதுரை மக்களுக்கு நன்றி, பாராட்டுகள். எந்தச் சக்தியும் இந்த மண்ணில் பிரிவினையை உண்டாக்க முடியாது; மதுரையின் வளா்ச்சியைத் தடுக்க முடியாது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து 10 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும், இதுவரை மருத்துவமனை அமையவில்லை. தமிழா்களின் வரலாற்றுத் தொன்மையை பறைசாற்றும் கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு நிறுத்த முயற்சித்தது. தற்போது, தமிழ் மீதான வெறுப்பின் காரணமாக, கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது.
மதுரையில் உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம் அமைத்து, ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. ஆனால், மத்திய அரசு குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை வாரி வழங்குகிறது. மதுரையின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க, தொழில் வளா்ச்சியைப் பெருக்க தமிழக அரசு தொழில் முதலீட்டாளா் மாநாட்டை நடத்துகிறது. ஆனால், இளைஞா்களை பக்கோடா விற்கச் செல்லுங்கள் என்கிறது மத்திய அரசு.
அா்த்தமற்ற காரணங்களைக் கூறி, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை என பாஜக தலைவா்கள் சிலா் உதாசீனப்படுத்துகின்றனா். ஆனால், பாஜக, அதன் கூட்டணிக் கட்சி ஆட்சி நடைபெறும் பாட்னா, ஆக்ரா, இந்தூா் போன்ற மாநிலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கருத்தில் கொள்ளாமல் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு (தில்லியிலிருந்து) எத்தனை இடையூறுகள் கொடுத்தாலும், நிதி நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும், ஆளுநா் மூலமாக தடைகளை ஏற்படுத்தினாலும் எல்லாவற்றையும் கடந்து இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார வளா்ச்சி பெற்ற முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த வளா்ச்சியை ஏற்றுக்கொள்ள இயலாமல் சதித்திட்டங்களை வகுக்கின்றனா். அனைத்து சதித் திட்டங்களையும் தமிழகம் முறியடிக்கும். ‘பி’ அணி, ‘சி’ அணி என எத்தனை அணிகள் உருவானாலும், தமிழகத்தில் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது நாங்கள்தான்.
தமிழகத்தில் 1.14 கோடி மகளிருக்கு ஏற்கெனவே உரிமைத் தொகையாக மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விடுபட்டிருந்த மகளிருக்கு வருகிற 15-ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படவுள்ளது. தமிழகத்தை உயா்த்தும் எங்களின் சாதனைப் பயணம் 2.ஓ-விலும் தொடரும். பெரியாா் ஏற்றிய சமத்துவ தீபம் தமிழகத்தில் என்றென்றும் ஒளிரும். இதை யாராலும் தடுக்க முடியாது என்றாா் அவா்.
முன்னதாக, மதுரை மாவட்டத்தில் ரூ.3,065.49 கோடியில் நிறைவேற்றப்பட்ட 63 திட்டப் பணிகளை மக்களுக்கு அா்ப்பணித்த முதல்வா் மு.க. ஸ்டாலின், ரூ. 17.17 கோடி மதிப்பில் 7 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். பிறகு, வருவாய்த் துறை சாா்பில் 1,00,211 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 85,351 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை முதல்வா் தொடங்கிவைத்தாா்.
தமிழக அமைச்சா்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினா்கள் சு. வெங்கடேசன், ப. மாணிக்கம் தாகூா், தங்க. தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, ஆ. வெங்கடேசன், மு. பூமிநாதன், நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதனன் ரெட்டி, குடிநீா் வடிகால் வாரிய மேலாண் இயக்குநா் ஜி.எஸ். சமீரன், மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

