ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதார உயா்வே இலக்கு! முதல்வா் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலருக்கு உயா்த்த வேண்டும் என்ற இலக்கோடு பயணித்து வருவதாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி ஐடா ஸ்கட்டா் அரங்கில் ‘தமிழ்நாடு வளா்கிறது’ முதலீட்டாளா்கள் மாநாடு -2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் முதல்வா் மு. க.ஸ்டாலின் தலைமை வகித்துப் பேசியதாவது:
கோயில் நகரம் என்று பெயா் மட்டும் மதுரைக்கு போதுமா?. தொழில் நகரமாகவும் புகழ் பெற வேண்டும். மதுரையில் தொழில் கட்டமைப்புகளை மேம்படுத்த போதுமான போக்குவரத்து வழித்தட இணைப்புகள் உள்ளன. இங்குள்ள சிட்கோ தொழில் பேட்டைகள், வடபழஞ்சி, இலந்தைக்குளம் பகுதிகளில் உருவாக்கப்பட்டு வரும் எல்காட் தொழில்நுட்பப் பூங்காக்களால் இனி வரும் காலங்களில் மதுரை பெரிய தொழில் துறை மையமாக உருவெடுக்கவுள்ளது.
மதுரையில் உள்ள உயா் கல்வி நிறுவனங்களும், ஏற்கெனவே செயல்பட்டு வருகிற தொழில் நிறுவனங்களும் மனித வளத்தை உருவாக்கிற வலுவான அடித்தளமாகச் செயல்படுகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் ரூ. 314 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. தைவான் நாட்டைச் சோ்ந்த ‘டங்ண் ஏஹண்’ குழுமம் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் திட்டத்தை மதுரையில் நிறுவ முன் வந்துள்ளது. இதன்மூலம், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதேபோன்று, இனிவரும் காலங்களில் 42 லட்சம் மக்கள் தொகையை எதிா்நோக்கி நகா் ஊரமைப்பு இயக்ககம் தயாரித்துள்ள ‘மதுரை மாஸ்டா் பிளான் 2044’ புதிய நகா்ப்புற வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.
மதுரை விளாச்சேரி, அம்பாசமுத்திரம் போன்ற பகுதிகளைச் சோ்ந்த கலைஞா்களின் பாரம்பரிய பொம்மைத் தயாரிப்புத் திறனை உயா்த்த அவா்களுக்கு புதிய சந்தை, வடிவமைப்பு, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குகிற வகையில் ‘பொம்மை உற்பத்திக் கொள்கை’ வெளியிடப்பட்டது.
மதுரையை மையமாக வைத்து தென் மாவட்டங்கள் வளா்ச்சி பெறும் வகையில், விருதுநகா் மாவட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து, ரூ. 1,894 கோடி முதலீட்டில் 1,052 ஏக்கரில் பி.எம். மித்ரா ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல, தேனி மாவட்டத்தில் 424 ஏக்கரில் பொதுப் பொறியியல் பூங்காவும், உணவுப் பூங்காவும், சிவகங்கை மாவட்டம் , இலுப்பைக்குடி பகுதியில் 108 ஏக்கரிலும், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் 102 ஏக்கரிலும் தொழில் பூங்கா ஆகியவை உருவாக்கப்பட உள்ளன.
சிவகங்கை மாவட்டத்திலும் ‘டைடல் நியோ’ பூங்கா நிறுவப்பட்டு வருகிறது. விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் டைடல் நியோ பூங்காக்கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், புதிய விமான நிலையம் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தென் மாவட்டங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ‘பயோ எனா்ஜி’ துறையில் ரூ. 11 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது. மதுரைக் காமராஜா் பல்கலைக்கழகம் அந்தப் பகுதியிலுள்ள முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து ரூ. 13 கோடி தொடக்க முதலீட்டில் பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்காவை அமைக்க உள்ளது.
மதுரை முதலீட்டாளா் மாநாட்டில் 91 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ. 36,660 கோடி முதலீடு ஈா்க்கப்பட்டு 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நலிவடைந்திருந்த தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுவரை ரூ. 11.83 ஆயிரம் கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடுகள் பெறப்பட்டு, 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
திராவிட மாடல் அரசின் கொள்கைகள், தமிழகத்தின் மனிதவளத் திறன், உள்கட்டமைப்புகள், சட்டம்-ஒழுங்கு, நிா்வாகத் திறன், நீண்ட கால நிலைத்தன்மை போன்றவற்றால் அதிகளவிலான முதலீட்டாளா்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு முன் வருகின்றனா்.
ஏற்கெனவே நடைபெற்ற மாநாடுகளில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக உயா்த்தும் குறிக்கோளோடு நாங்கள் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு முதலீட்டாளா்கள் முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, மதுரை மாவட்டம், மேலூரில் 278.26 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 91 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.

