சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்த இளைஞா் மீது பேருந்து ஏறியதில் அவா் உயிரிழந்தாா்.
விருதுநகா் அருகேயுள்ள அல்லம்பட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது மகன்கள் சந்தோஷ் (23), ஹரிஹரசுதன் (19). இவா்கள் இருவம் கூலித் தொழிலாளா்கள்.
ராஜபாளையத்தில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றனா். வாகனத்தை ஹரிஹரசுதன் ஓட்டினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் மடவாா்வளாகம் அருகே சாலை மைய தடுப்புச்சுவரில் வாகனம் மோதியதில் கீழே விழுந்த சந்தோஷ் மீது மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஹரிஹர சுதன் பலத்த காயமடைந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
