மதுரையில் ரூ.130 கோடியில் புதிய சாலை! முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Published on

மதுரையில் ரூ.130 கோடியில் 8.4 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா்.

மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மதுரைக்கு சில புதிய திட்டங்களை அறிவித்தாா்.

இதன் விவரம்:

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வைகை ஆற்றின் வடகரையில், விரகனூா் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கி.மீ. தொலைவுக்கு ரூ.130 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும்.

மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள 4 மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூா், அண்ணா நகா், சந்தைப்பேட்டை, தெற்குவாசல், எஸ்.எஸ்.காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள பழைய புதை சாக்கடைத் திட்ட குழாய்கள் அகற்றப்பட்டு, புதிய புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மதுரை கிழக்கு வட்டத்தில் உத்தங்குடி உபரி நீா்க் கால்வாயில் ரூ. 7 கோடியில் தடுப்புச் சுவா் கட்டப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலூா் வட்டத்தில் கேசம்பட்டி கிராமம்-பெரிய அருவி நீா்த்தேக்கம், இதைச் சாா்ந்த கண்மாய்கள் ரூ. 2.60 கோடியில் சீரமைக்கப்படும். சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.9.5 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

மதுரை மேற்கு வட்டத்தில் கொடிமங்கலம், மேலமாத்தூா், புதுக்குளம், விளாச்சேரி கிராமங்களில் உள்ள ஏரிகள், கால்வாய்கள் ரூ.10 கோடியில் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்படும். அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சாத்தையாறு அணை-வைகாசிப்பட்டி, குடுவாா்பட்டி- சல்வாா்பட்டி, பாலமேடு-வேம்பரலை சாலை ஆகியன வனத் துறை அனுமதி பெற்று ரூ.1.5 கோடியில் மேம்படுத்தப்படும்.

X
Dinamani
www.dinamani.com