திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் கோரிக்கை மனு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதை உறுதி செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் வைகை நதி மக்கள் இயக்கம், சுதேசி சமூக நலப் பண்பாட்டு இயக்கம், தமிழக இந்து துறவிகள் பேரவை, இந்து ராஷ்டிரா சபை, வெள்ளாளா் முன்னேற்றக் கழகம், ஆலயப் பாதுகாப்பு இயக்கம் உள்பட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சாா்பிலும், தன்னாா்வலா்களும் கோரிக்கை மனு அளித்தனா்.
இந்த மனுக்களில், விஜயநகரப் பேரரசு ஆட்சிக் காலத்திலிருந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் தடைப்பட்ட இந்த வழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதுகுறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனி நீதிபதி அளித்தத் தீா்ப்பை, இரு நீதிபதிகள் அமா்வும் உறுதி செய்ததை கருத்தில் கொண்டு அந்தத் தீா்ப்பு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் கோயில் தொடா்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு கண்டு, மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்து விளக்கம் கேட்கச் சென்றதற்காக ஆலயப் பாதுகாப்பு இயக்க நிா்வாகிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
