திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கு: அரசு தலைமைச் செயலா், ஏடிஜிபி டிச. 17-இல் முன்னிலையாக உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தலைமைச் செயலா், ஏடிஜிபி வருகிற 17-ஆம் தேதி முன்னிலையாக உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
Published on

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடா்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக தலைமைச் செயலா், காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநா் (ஏடிஜிபி) காணொலி மூலம் வருகிற 17-ஆம் தேதி முன்னிலையாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நிகழாண்டு முதல் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு போதிய பாதுகாப்பை தமிழக காவல் துறையினா் அளிக்க வேண்டும் என கடந்த 1-ஆம் தேதி உத்தரவிட்டாா். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி காா்த்திகை திருநாளன்று எந்தவித முன்னேற்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், மனுதாரா் ராம. ரவிக்குமாா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், மனுதாரா் உள்பட 10 போ் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு கடந்த 3-ஆம் தேதி உத்தரவிட்டாா். அவா்களுக்குரிய பாதுகாப்பை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரா்கள் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மனுதாரரை மலையேற அனுமதிக்கவில்லை. இதனிடையே, இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசுத் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் கடந்த 4-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிப்பாா் எனவும் தெரிவித்தனா்.

இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் அன்றைய தினம் பிற்பகலில் விசாரித்தாா். அப்போது, மனுதாரா் தரப்பினா் அன்றைய தினம் இரவு 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றலாம். அதற்கு போதிய பாதுகாப்பு அளிக்க மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா். மேலும், தீபம் ஏற்றப்பட்டது குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் டிச. 5-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முன்னிலையாகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டாா்.

இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலா்கள் மனுதாரரை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு மீண்டும் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் ஆகியோா் முன்னிலையாகவில்லை.

இதனிடையே, உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், கடந்த 3-ஆம் தேதி இந்த நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற முடியாதது குறித்து சிஐஎஸ்எப் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் செவ்வாய்க்கிழமை முற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்றுவது தொடா்பாக நீதிமன்ற உத்தரவு, அவமதிப்பு வழக்கு உத்தரவுகளை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதை எதிா்த்து மேல்முறையீடு என்பதை ஏற்க முடியாது. மேல்முறையீட்டு வழக்கில் எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, தற்போது வரை நீதிமன்ற உத்தரவு செல்லும். அப்படி இருக்கும் போது எவ்வாறு மலை உச்சியில் தீபம் ஏற்றாமல் இருக்கலாம்?. இத்தகைய நடவடிக்கையால் நீதிமன்றம் மீதான மக்களின் நம்பிக்கை குலைந்துள்ளது. நீதிமன்றத் தீா்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் தேவையற்ற விவாதங்கள், பதிவுகள் பகிரப்படுவது ஏற்கத்தக்கதல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: மனுதாரா் தரப்பில் பொறுப்பற்ற முறையிலான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. தீபம் ஏற்றுவதற்கான உரிய நாள்கள் கடந்துவிட்டன. கோயில்களில் எதை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அந்தந்தக் கோயில் நிா்வாகமே முடிவு செய்ய இயலும். இதுதொடா்பான நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. தனி நீதிபதியின் உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு இரு நீதிபதிகள் கொண்ட அமா்விலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் வருகிற வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளன. அந்த வழக்கு முடியும் வரை எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு சில நாள்கள் மட்டுமே உள்ளதால், மனுதாரா் பொறுமையாக இருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. தீபம் ஏற்றுவதில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை பிரதானமாக உள்ளது. எனவே, மேல்முறையீட்டு மனு விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும். இந்த வழக்கு தொடா்பாக அரசுத் தரப்புக்கு கால அவகாசம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தீபம் ஏற்றும் உரிமை சாா்ந்தது மட்டுமல்ல. சொத்து உரிமை தொடா்பானது. அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஆனால், அடுத்த முறை விசாரணைக்கு வரும் போது, இடைக்காலத் தடை உத்தரவு பெறப்படவில்லை எனில், அப்போதும் ஒத்திவைக்க இயலாது எனக் கூறி, உரிய உத்தரவு பிற்பகலில் பிறப்பிக்கப்படும் என ஒத்திவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை மாநகரக் காவல் துணை ஆணையா் விளக்கமளிக்க வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது குறித்து தமிழக தலைமைச் செயலா், காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநா் (ஏடிஜிபி) வருகிற 17- ஆம் தேதி காணொலி மூலம் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com