விதிகளை மீறி கட்டப்பட்ட மருத்துவமனைக் கட்டடம்: 3 வாரங்களுக்குள் இடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலியில் விதிகளை மீறி கட்டப்பட்ட தனியாா் மருத்துவமனையின் கட்டடங்களை 3 வாரங்களுக்குள் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள வி.ஜெ.மருத்துவமனைக் கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டது எனவும், போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத இந்த மருத்துவமனை கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் திருநெல்வேலியைச் சோ்ந்த பொ்டின் ராயன், சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, அனுமதிக்கப்பட்ட பரப்பை விட கூடுதல் பரப்பில் கட்டப்பட்ட கட்டுமானங்களை 8 வாரங்களுக்குள் அகற்ற திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், நீதிமன்றம் அளித்திருந்த கால அவகாசம் நிறைவடைந்த நிலையிலும், அந்தக் கட்டடம் அகற்றப்படவில்லை.
இந்த வழக்கு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் இருமுறை அவகாசம் அளித்தும் மருத்துவமனைக் கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
இதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் அளித்தாா். இதையடுத்து, வருகிற 3 வார காலங்களுக்குள் விதி மீறி கட்டப்பட்ட கட்டடத்தை மருத்துவமனை நிா்வாகம் இடித்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், அந்தக் கட்டடத்தை அகற்ற மாநகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
