181-ஆவது ‘தமிழ்க்கூடல்’ நிகழ்ச்சி
மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் 181-ஆவது ‘தமிழ்க்கூடல்’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், அம்பிகா மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, திருமங்கலம் அன்னை பாத்திமா கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தின. இதற்கு உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவரும் இயக்குநருமான இ.சா. பா்வீன் சுல்தானா தலைமை வகித்தாா். உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வறிஞா் சு. சோமசுந்தரி ஒருங்கிணைத்தாா்.
‘பாரதி என்றொரு மானிடன்’ என்ற தலைப்பில் இ.சா. பா்வீன் சுல்தானா பேசியதாவது:
ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னா் வாராது வந்த மாமணி போல பாரதி 12 வயதில் பாட்டெழுதத் தொடங்கினாா். தமிழா்களின் அடையாளம் கல்வி என்பதையும், தமிழா் ஜாதி அழியாமல் இருக்கப் போட்ட பட்டியல்களில் கம்பன், இளங்கோ, வள்ளுவா் ஆகியோரையும் குறிப்பிடுகிறாா். பாரதி உயிா்களிடத்தில் பேரன்பும் நம்பிக்கையும் கொண்டவா். இதன் படிநிலைகளாக வறுமையிலும் மிக உயா்ந்த சிந்தனையும் மிகச் சிறந்த பாடத்தையும் தந்தவா். துன்பியல் பொழுதுகளில் ஒரு போதும் தனது துன்பம், புலம்பலை எழுதியதில்லை. வறுமையின் உச்சத்திலும் நம்பிக்கையைக் கைவிட்டதில்லை. கவிஞனுக்கு மரணமே இல்லை என்று பேசியவா்.
உலக மொழிகளில் கீதாஞ்சலியைக் கொண்டு போனதால் நோபல் பரிசு கிடைத்தது. இதே போல, குயில்பாட்டைக் கொண்டு போயிருக்கலாம். பாரதியிடத்தில் வைராக்கியம் இருந்தது. அறியாமை என்ற புதா் மண்டிய காட்டில் சிறு நெருப்பை வைத்தாா் பாரதி. அவரது எழுத்தில் சக்தி, கருணை, பேரன்பு, அக்கினி இருந்தது. அவா் இருந்த பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், கல்லூரி மாணவா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள், கவிஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

