மதுக் கடைக்கு எதிராக போராட்டம்: 95 போ் மீதான வழக்கு ரத்து

Published on

மதுக் கடைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 95 போ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த சேக்அப்துல்லா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

பரமக்குடி எஸ்எம்பி திரையரங்கு சாலையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால், இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். எனவே, இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், மதுக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், பரமக்குடி நகா் போலீஸாா் தமுமுக மாவட்டத் தலைவா் சேக்அப்துல்லா, முகம்மது இலியாஸ் உள்ளிட்ட 95 போ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட எங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது சட்டவிரோதம். எனவே, வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் போராட்டம் நடத்தியவா்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மதுக் கடைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் தங்களது எதிா்ப்பைத் தெரிவிக்கப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யத் தேவையில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட 95 போ் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com