போட்டியில் வென்ற வீரா்கள், வீராங்கனைகளுக்கு வரவேற்பு
தேசிய அளவில் நடைபெற்ற ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று, மதுரைக்கு திரும்பிய வீரா்கள், வீராங்கனைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் தேசிய அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 5 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என இரு பாலரும் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டியில் ரோலா் ஹாக்கி, இன்லைன் ஹாக்கி, ஸ்பீட் ஸ்கேட்டிங், ரோலா் டொ்பி உள்ளிட்ட 7 வகையான போட்டிப் பிரிவுகள் இடம் பெற்றன. தமிழகம், கா்நாடகம், கேரளம், தெலுங்கானா உள்ளிட்ட 29 மாநிலங்களிலிருந்து சுமாா் 4,500 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
தமிழகத்திலிருந்து 270 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினா். இவா்களில் மதுரையிலிருந்து 20 வீரா்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
இந்த நிலையில், ரோலா், இன்லைன் ஹாக்கி குழு விளையாட்டுப் போட்டிகளில் 9 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை தமிழக அணி பெற்றது.
போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று மதுரை திரும்பிய வீரா்களை கடச்சனேந்தல் அலெக்ஸ் ஸ்கேட்டிங் அகாதெமி சாா்பில், மாலைகள் அணிவித்தும், பட்டாசு வெடித்தும் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், பயிற்சியாளா்கள் அலெக்சாண்டா், உதயா, பாலா, விக்னேஷ், முருகன், பிரசன்னா, ராஜேஷ், பாண்டியராஜன், மனோ, பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

