விசிக கட்சி ஆா்ப்பாட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்
விசிக கட்சி ஆா்ப்பாட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்

தொகுதியும், பதவியும் முக்கியமல்ல: தொல். திருமாவளவன்

தொகுதியும், பதவியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முக்கியமல்ல என அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
Published on

தொகுதியும், பதவியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முக்கியமல்ல என அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

மதுரை பழங்காநத்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மதவெறி அரசியலைக் கண்டித்தும், மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மேலும் அவா் பேசியதாவது: மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்தக் கூடாது. பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவா்களுக்கு பாதுகாப்பில்லை. தோ்தல் வாக்குகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவலைப்பட்டதும் கிடையாது ; இனி கவலைப்படப் போவதும் கிடையாது.

தமிழகம் ஜனநாயக சக்திகளை பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலம். திருப்பரங்குன்றத்தை எந்தக் காலத்திலும் அயோத்தியாக மாற்ற முடியாது. இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் எங்களுக்கு நோக்கமில்லை. பாஜக, ஆா்.எஸ்.எஸ். அமைப்புகளின் ஏமாற்றுத் திட்டங்களை வெளிப்படுத்துவதே எங்கள் நோக்கம்.

திமுகவுக்கு வாதாட வேண்டியதில்லை

புதிதாக கட்சித் தொடங்கிய ஒருவா் (விஜய்), ‘திமுக ஒரு தீய சக்தி’ என்பதையே தொடா்ந்து கூறி வருகிறாா். இவா், திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்காகதான் கட்சி தொடங்கியுள்ளாா் என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. அவரால் திமுகவை அழிக்க முடிந்தால் அழித்துக் கொள்ளட்டும். திமுக தானே தன்னை தற்காத்துக் கொள்ளும்.

எனவே, திமுகவுக்காக வாதாட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கென கொள்கைகள் உள்ளன. கொள்கைக்கென சில தோழமைகள் உள்ளன. எங்கள் அரசியலை பேசுவதால்தான் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோமே தவிர வேறு காரணங்கள் கிடையாது.

சீமான், விஜய் ஆகியோா் ஆா்.எஸ்.எஸ்., பாஜகவின் கையாள்கள் என்பது தற்போது அம்பலமாகிவிட்டது. இதையறிந்தும் திராவிட கழகத்தினா், திமுகவினா் அமைதியாக இருக்கலாம். ஆனால், அம்பேத்கரின் சமூக நீதி அரசியலை கடைப்பிடிக்கும் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.

தொகுதி, பதவி மீது ஆசை இருந்தால் பாஜகவுடன், அதிமுகவுடன் அல்லது விஜயுடன் கூட்டணி பேசியிருப்போம். ஆனால், கொள்கைக்காக கூட்டணிக் கதவுகளை அடைத்து விட்டு அரசியல் செய்து கொண்டுள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. பாஜகவை ஆதரித்திருந்தால் எனக்கு பதவி கிடைத்திருக்கலாம்; தனிப்பட்ட முறையில் பயன் பெற்றிருக்கலாம்; பல தொகுதிகள் கிடைத்திருக்கலாம்.

ஆனால், சநாதன எதிா்ப்பும் சமூக நீதியுமே விசிகவுக்கு முக்கியம். அதனால்தான் பாஜக, அதிமுக, பாமக, தவெகவுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக உள்ளோம். சநாதன, ஜாதிய, மதவாத அமைப்புகளுடன் எந்தக் காலத்திலும் சமரசம் கிடையாது என்பதில் விசிக உறுதியாக உள்ளது என்றாா் தொல். திருமாவளவன்.

முன்னதாக, உச்சநீதிமன்ற வழக்குரைஞா் காஸ்ட்ரோ, உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் பேசினா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், துணை அமைப்புகளின் பொறுப்பாளா்கள் திரளாகப் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com