

மதுரை மாநகராட்சி சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் ஏற்பட்டிருப்பதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்தனா். எனவே, மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, சாலைகளில் திரியும் கால்நடைகளை அகற்ற வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களில் 100 வாா்டுகள் உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 15 லட்சத்துக்கும் அதிகமானோா் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமன்றி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு, கல்விக்கு மையமாக மதுரை திகழ்கிறது. எனவே, தினமும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சி சாலைகள், தெருக்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இந்த கால்நடைகள் திடீரென வாகனங்களின் குறுக்கே புகுந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கடந்த 2024- ஆம் ஆண்டு அப்போதைய மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க தன்னாா்வலா்கள் கொண்ட குழுவை நியமித்தாா். இந்தக் குழுவினா் இரவு நேரங்களில் சாலைகள், தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை மீட்டு கோசாலைகளுக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், மாடு, குதிரை, பன்றி, நாய் ஆகியவற்றை வளா்க்க உரிமம் பெற வேண்டும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதன்படி, மாடுகளுக்கு ரூ.100, இளங்கன்றுகளுக்கு ரூ. 50, குதிரை ரூ. 150, கழுதை ரூ.150, நாய்கள் ரூ. 100, பன்றி ரூ. 100 உரிமத் தொகை செலுத்தி அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் முறையாக உரிமம் பெறாமல் கால்நடைகளை வளா்ப்போருக்கு கால்நடைகளின் வகைக்கு ஏற்ப ரூ.1,500 முதல் ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு ஆரம்ப நிலையில் முறையாக பின்பற்றப்பட்டது.
ஆணையா் இடமாற்றம், அபராதம் விதிக்க உரிமையாளா்களின் எதிா்ப்பு, பறிமுதல் செய்த கால்நடைகளை கோசாலையில் பராமரிக்க முடியாத நிலை, அதிகாரிகள் கவனம் செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கால்நடைகள் சாலைகளில் திரிவதை தடுக்க முடியவில்லை. இதனால், மதுரை மாநகராட்சி சாலைகள், தெருக்களில் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மதுரை பெரியாா் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், காய்கறிச் சந்தைகள், உழவா் சந்தைகள், புதூா், மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் பகுதி, நான்கு மாசி வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள், நான்கு வெளி வீதிகள், நான்கு மாரட் வீதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் அதிகளவில் நடமாடுகின்றன. இதேபோல, வைகை ஆற்றின் வடகரை, தென்கரை ஆகிய பகுதிகளில் உள்ள அணுகு சாலைகளில் குதிரைகள், கழுதைகள், பன்றிகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.
இந்த கால்நடைகள் சாலைகளின் குறுக்கே திடீரென புகுந்து விடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனா். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
எனவே, மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் அல்லது உரிமையாளா்களுக்கு ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின் படி அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது : மதுரை மாநகராட்சியில் மேயா் இல்லாததால் நிா்வாக அமைப்பு சீா்குலைந்துள்ளது. சாலைகள், தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க கோரிக்கை விடுத்தால் அதிகாரிகள் யாரும் அதில் கவனம் செலுத்துவதில்லை. கால்நடைகளால் வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி சாலை, குடிநீா், புதைச் சாக்கடை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்தாலும் அதிகாரிகள் பரிசீலிப்பதில்லை என்றனா்.
மதுரை மாநகராட்சி நகா்நலப் பிரிவு அலுவலா் ஒருவா் கூறியதாவது: உரிமையாளா்களின் எதிா்ப்பால் கால்நடைகளை பிடிக்க முடிவதில்லை. பழைய நடைமுறையையும் பின்பற்ற முடியவில்லை. கடந்த அக்டோபா் மாதம் வரை 425 மாடுகள் பிடிக்கப்பட்டன. அவற்றின் உரிமையாளா்களுக்கு ரூ. 12.79 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவா்கள் அபராதத் தொகையை செலுத்தவில்லை. இருப்பினும், கால்நடைகள் சாலைகள், தெருக்களில் திரிவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.