மதுரையில் சிறப்பு புத்தகக் கண்காட்சி
நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சாா்பில் மதுரையில் சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நியூ செஞ்சுரி புத்தக நிலைய முதுநிலை விற்பனை சீரமைப்பாளா் அ. கிருஷ்ணமூா்த்தி தெரிவித்திருப்பதாவது :
மக்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை வளக்கும் விதமாக நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சாா்பில் ஆண்டுதோறும் புத்தாண்டையொட்டி, சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய புத்தக விற்பனை கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதன்படி, மதுரை மேலகோபுரத் தெருவில் உள்ள நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிச. 31-ம் தேதி இரவு முழுவதும் புத்தக விற்பனைக் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சியில், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, திறனாய்வு, அரசியல், அறிவியல், சூழலியல், வேளாண்மை, மருத்துவம், கல்வியியல், பொது அறிவு, சிறாா் நூல்கள் உள்பட 200 தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் 10 முதல் 50 சதவீத தள்ளுபடி விலையிலும், சிறப்பு விலையிலும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன என்றாா்.
