அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராமக் குழு மூலம் நடத்தக் கோரிக்கை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராமக் குழு மூலம் நடத்த அனுமதிக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
Published on

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராமக் குழு மூலம் நடத்த அனுமதிக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு குழு நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: மதுரை, அவனியாபுரத்தில் நூற்றாண்டுகளை கடந்த நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியை அனைத்து தரப்பினரும் பங்கேற்ற பொதுவான

கிராமக் குழுவினா் நடத்தி வந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டில் ஒரு சங்கத்தின் சாா்பில் ஒரு குடும்பத்தை முன்னிலைப்படுத்தி போட்டி நடத்தப்பட்டது. இதற்கு கிராம பொதுமக்கள், கிராமக் குழுவினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதன் காரணமாக, கடந்த 6 ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியை கிராமக் குழு மூலம் நடத்த அனுமதிக்கக் கோரி, தொடா்ந்து மனு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது அதிருப்தி அளிப்பதாக உள்ளது.

எனவே, அமைதித் திட்டம் என்ற பெயரால் பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் நடவடிக்கையை அரசு கைவிட்டு, கிராமக் குழு மூலம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com