காசி தமிழ்ச் சங்கமம் கலாசார ஒற்றுமையை வலுப்படுத்தும்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

காசி தமிழ்ச் சங்கமம் கலாசார ஒற்றுமையை வலுப்படுத்தும்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிகள் இந்தியாவின் கலாசார ஒற்றுமையை வலுப்படுத்தும் என மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
Published on

காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிகள் இந்தியாவின் கலாசார ஒற்றுமையை வலுப்படுத்தும் என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மேலும் பேசியதாவது: காசி தமிழ்ச் சங்கமம் 4.0 தமிழ்க் கலாசாரத்தின் ஒரு புதிய அத்தியாயம். எட்டயபுரத்தில் பிறந்த மகாகவி பாரதியாா் ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்’ என்று பாடினாா். இதன்படி, காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமா் நரேந்திர மோடி நடத்தி வருகிறாா்.

இது இந்தியப் பாரம்பரியங்களுடன் மக்களைப் பிணைக்கும் நிகழ்ச்சி. இதன்மூலம், தேசத்தின் கலாசார ஒற்றுமை வலுப்படும். இந்தியா பழைமையான கலாசாரம், தத்துவம், நெறிமுறைகளால் கட்டமைக்கப்பட்ட மக்கள் வாழும் தேசம். தமிழ் நாகரிகம் என்பது இந்திய நாகரிகத்தின் ஓா் அடித்தளம். தமிழ் ஒரு மகத்தான பாரம்பரியத்தை தேசத்துக்கு அளித்துள்ளது. தமிழ் மொழியின் தத்துவங்களும், நெறிகளும் வெறும் கல்வி மட்டுமல்ல. நமது பண்பாட்டு விழுமியங்களை வடிவமைக்கிறது என்றாா் அவா்.

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இது, ஒவ்வொரு ஆண்டும் மென்மேலும் புகழ் பெற்று வருகிறது. இது, தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. காரணம், காசிக்கும், தமிழா்களுக்குமான உறவு பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தது. தமிழ் மொழியை கற்போம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட காசி தமிழ்ச் சங்கமம் 4.0 மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் தமிழைக் கற்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழ் மொழி பழைமை வாய்ந்தது, சக்தி வாய்ந்தது, மிகவும் அழகானது. தமிழுக்கும், தமிழ் கலாசாரத்துக்கும் உலகளாவிய அளவில் பெருமை சோ்ப்பதில் பிரதமா் நரேந்திர மோடிக்கு ஈடு இணை கிடையாது. இதற்காக தமிழக மக்கள் சாா்பில் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

மத்திய இணை அமைச்சா் எல். முருகன்: ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற திட்டத்தின் கீழ் காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்ட்ர தமிழ் சங்கமம் நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

பல நூறு ஆண்டுகளாக காசிக்கும், தமிழகத்துக்கும் இணை பிரியாத ஒரு மிகப்பெரிய ஒரு பந்தம் உள்ளது. சங்க இலக்கியங்களில் குறிஞ்சித் திணை, கலித்தொகை ஆகியவற்றில் காசி நகரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, பல தமிழ் பக்தி இலக்கியங்களிலும் காசிக்கும், தமிழுக்குமான தொடா்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 35-க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்கு மொழிபெயா்க்கப்பட்டது.பிரதமரின் முயற்சியால் உலகெங்கும் திருக்கு கலாசார மையங்கள் அமைக்கப்படுகின்றன. பிரதமா் நரேந்திர மோடி தமிழ் மொழி, கலாசாரம், பண்பாட்டை உலகமெல்லாம் எடுத்துச் செல்வது போற்றுதலுக்குரியது என்றாா் அவா்.

சட்டப்பேரவை உறுப்பினருமான நயினாா் நாகேந்திரன்: தமிழுக்கும், தமிழருக்கும் ஒரு கட்டமைப்பு உண்டு. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு, நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புானூறு போன்ற பல இலக்கியங்களைக் கொண்ட இந்த மொழியின் சிறப்பை அனைவரும் உணர வேண்டும்.

தமிழ் மொழியை தமிழகம் தவிர, இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள மாணவ, மாணவிகளும் படிப்பதற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ் மொழியின் சிறப்பை உலகறியும் செய்யும் பிரதமா் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் சிறப்புக்குரியவை என்றாா் அவா்.

தமிழில் உரையாற்றிய ஆளுநா்

இந்த விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி முழுவதும் தமிழிலேயே பேசினாா். இது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது. இதைத் தொடா்ந்து, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசிய போது, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தமிழ் கற்றுக் கொண்டது போல, தானும் விரைவில் ஹிந்தி மொழியை கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com