தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக துணை போகிறது: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக துணை போகிறது: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக துணை போவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
Published on

தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக துணை போவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மதுரை மண்ணில் மத அரசியலுக்கு இடமில்லை, வளா்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து, மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கட்சியின் மாவட்ட குழு செயலா் கணேசன், மாவட்டச் செயலா் ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். உண்ணாவிரதப் போராட்டத்தை மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தொடங்கிவைத்தாா்.

இந்தப் போராட்டத்தை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் நிறைவு செய்து வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பல ஆண்டுகளாக பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட்டு வந்த இடத்தை மாற்றி, வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கு இதுவரை எந்த நியாயமான காரணமும் அவா்கள் முன் வைக்கவில்லை.

நீதிமன்ற தீா்ப்புகள் சமூக அமைதிக்கும், மக்கள் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. தமிழகத்தில் பாஜக காலூன்ற எண்ணுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

இதன் மூலம், அதிமுகவின் கடைசி அத்தியாயத்தை அவா் எழுதிக் கொண்டிருக்கிறாா். திருப்பரங்குன்றம் வழக்கில், முந்தைய காலகட்டங்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அரசு சாா்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்கு மூலங்களில், பாரம்பரிய இடத்தில் ஏற்றப்படும் தீபத்தின் இடத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாற்றத்துக்கான எந்த நியாயமான காரணமும் இல்லை என்றும் தெளிவாக தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்டே நீதிமன்றமும், வழக்குகளை தள்ளுபடி செய்தது.

இந்த வரலாற்றை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டாா்.

பாஜகவும், ஆா்.எஸ்.எஸ். அமைப்பும் தமிழக மக்களிடம் மத வெறியை தூண்டுகிறது. அவா்களின் மதவெறி அரசியலுக்கு எதிராக, மதச்சாா்ப்பற்ற அனைத்து மக்களும் ஒன்று திரள வேண்டும். தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிக்கிறது. அதற்கு அதிமுக துணை போகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com