தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு
தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலுகோப்புப் படம்

நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் இல்லம் முன் பிப். 17-இல் சாலைப் பணியாளா்கள் போராட்டம்

தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் இல்லம் முன் வருகிற பிப். 17-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம்
Published on

தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் இல்லம் முன் வருகிற பிப். 17-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் மா. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் ச. மகேந்திரன், கு. பழனிச்சாமி, மாநிலச் செயலா் சு. செந்தில்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலா் ஆ. அம்சராஜ் வேலை அறிக்கையை வாசித்தாா். மாநிலப் பொருளாளா் இரா. தமிழ், வரவு- செலவு அறிக்கையை சமா்ப்பித்தாா்.

இதில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தப்படுவதன் காரணமாக சுமாா் 5 ஆயிரம் பணியிடங்கள் ஒழிக்கப்படும் நிலை உருவாகும் என்பதால், அந்த ஆணையத்தை கலைத்து நெடுஞ்சாலைத் துறையை அரசுத் துறையாக பாதுகாக்க வேண்டும்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயா்நீதி மன்றம் வழங்கிய தீா்ப்பின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி உடனடியாக ஆணை வழங்க வேண்டும்.

தொழில் நுட்ப கல்வித் திறன் பெறாத சாலைப் பணியாளா்களுக்கு ரூ.5,200, ரூ.1,900 தர ஊதியம் வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் உடனடி பணி நியமனம் வழங்க வேண்டும்.

ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை, சலவைப்படி வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை கிராமப்புற இளைஞா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஜன. 27-ஆம் தேதி அந்தந்த மாவட்டங்களில் உள்ள கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகங்கள் முன் மண்டல அளவில் பறையிசை முழக்கப் போராட்டம் நடத்துவது எனவும், பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பிரசார பேரியக்கம் நடத்துவது எனவும், 11-ஆம் தேதி திருச்சியில் மாநில அளவிலான உரிமை மீட்பு மாநில மாநாடு நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை வருகிற பிப். 17-ஆம் தேதி முதல் மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் இல்லம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com