அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலம்!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
Updated on
1 min read

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.

தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக 2026 காளைகளும், 1735 காளையர்களும் பதிவு செய்தனர்.

மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு களத்தில் விளையாடத் தகுதியுள்ள 1100 வீரர்களும் 900 காளைகளும் அனுமதிக்கப் பட்டனர்.

அவனியாபுரம் மந்தை அம்மன் கோவிலில் கிராம கமிட்டி, மாநகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் சார்பாக சாமி கும்பிடப்பட்டு வாடிவாசலில் பூஜையில் நடைபெற்றது. அதன்பின்னர், உறுதிமொழி எடுக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

இதற்கிடையே போட்டி நடைபெறவுள்ள அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள மந்தையம்மன் கோவில் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டது. அங்கிருந்து அம்பேத்கர் சிலை வரையும், அதனைத் தாண்டி அவனியாபுரம் பேருந்து நிலையம் எதிரே செல்லும் சாலை வரை 1.8 கி.மீ. தூரத்திற்கு சவுக்குக் கம்புகள் மற்றும் இரும்புத் தடுப்புகளால் வேலி அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று புறவாடியான, வாடிவாசல் பின்புறம் காளைகள் வரிசையாக வந்து செல்வதற்கு ஏதுவாக திருப்பரங்குன்றம் சாலையில் ஏறக்குறைய 2 கி.மீ. தூரத்திற்கு சவுக்குக் கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு விழா கமிட்டி சார்பாக வேட்டி, துண்டு, குத்துவிளக்கு, அண்டா, கட்டில், பீரோ, சைக்கிள், தலையணை, மெத்தை, செல்பேசி, தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டுவருகிறது.

விளையாட்டில் காயமடையும் வீரர்களை உடனடியாக மீட்பதற்கு செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் வாடிவாசல் அருகே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை மேற்கொள்வதற்கு 50 மருத்துவர்கள், 60 செவிலியர்கள் கொண்ட 5 மருத்துவக்குழுக்களும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் 5-க்கும் மேற்பட்ட அவசர ஊர்திகள் தயார்நிலையில் உள்ளன.

காயம்படும் காளைகளை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு 20-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவக்குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று அவற்றின் மேல்சிகிச்சைக்காக 3 கால்நடை அவசர ஊர்திகளும் மதுரை மாநகராட்சி மற்றும் கால்நடைத்துறை சார்பாக தயார்நிலையில் உள்ளன.

புறவாடி, காளைகள் வந்து சேருமிடம், அவனியாபுரம் பேருந்து நிலையப் பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் சுற்று முடிவில் தலா 2 மாடுகளை பிடித்த மணிகண்டன், மற்றும் சுஜித்குமார் ஆகியோர் இரண்டாவதுச் சுற்றுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

முடிவில் வெற்றி பெறும் காளைகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்புள்ள ஒரு டிராக்டரும் சிறந்த மாடுபிடி வீரருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஒரு காரும் வழங்கப்பட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com