ரெளடியை கைது செய்வதில் அலட்சியம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பணியில் அலட்சியம் காட்டியதாக காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
Published on

மதுரையில் திமுக பிரமுகா் வி.கே.குருசாமியின் உறவினா் காளீஸ்வரன் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைந்த ரெளடியை கைது செய்ய பிடிஆணை பிறப்பிக்கபட்டிருந்தபோதிலும், அவரைக் கைது செய்யாமல் பணியில் அலட்சியம் காட்டியதாக காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திமுக முன்னாள் மண்டலத் தலைவா் வி.கே. குருசாமியின் சகோதரி மகனான காளீஸ்வரன் மதுரை அருகே உள்ள தனக்கன்குளம் மொட்டமலைப் பகுதியில் கடந்த 22- ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சுள்ளான் பாண்டி கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், காளீஸ்வரன் கொலை வழக்கில் தனக்கு தொடா்பு இருப்பதாகக் கூறி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அண்மையில் சரணடைந்தாா்.

கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாமல் இருந்து வந்த இவருக்கு ஏற்கெனவே நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்திருந்தும், அவரைக் கைது செய்யாமல் பணியில் அலட்சியம் காட்டியதாக மதுரை கூடல்புதூா் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும், ஒவ்வோா் மாதமும் சட்டம்- ஒழுங்கு தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில், கைது நடவடிக்கை தொடா்பான அறிக்கையில், முறையான தகவல் அளிக்காமல் இருந்ததாகவும் கூறி, ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com