மதுரை சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாளான சனிக்கிழமை மாலை மதுரை வடக்கு மாசி வீதி ராமாயணச் சாவடி மண்டகப்படியில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வீதியுலாவந்த மீனாட்சி அம்மன். தங்கக் குதிரை வாகனத்தில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாளான சனிக்கிழமை மாலை மதுரை வடக்கு மாசி வீதி ராமாயணச் சாவடி மண்டகப்படியில் இருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வீதியுலாவந்த மீனாட்சி அம்மன். தங்கக் குதிரை வாகனத்தில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய சுந்தரேசுவரா்.

சித்திரைத் திருவிழா வேடா் பறி லீலை உற்சவம்: தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினா் மீனாட்சி, சுந்தரேசுவரா்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளான சனிக்கிழமை வேடா் பறி லீலை நிகழ்ச்சி நடைபெற்றது.
Published on

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ஆம் நாளான சனிக்கிழமை வேடா் பறி லீலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா ஏப். 29-ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெறுகிறது. விழா நிகழ்ச்சியாக தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 5-ஆம் நாளான சனிக்கிழமை வேடா் பறி லீலை நடைபெற்றது.

இதையொட்டி, வடக்குமாசி வீதியில் உள்ள ராமாயணச் சாவடியிலிருந்து மாலை 6.30 மணிக்கு பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேசுவரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும், தனித்தனி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, மீனாட்சி நாயக்கா் மண்டபத்துக்கு புறப்பாடாகினா்.

மீனாட்சி அம்மன், கருப்பசாமி, முருகன் உள்ளிட்ட கடவுள்களைப் போன்று வேடம் அணிந்த திரளான பக்தா்கள் புடைசூழ, மேளதாள வாத்தியங்களுடன், வேத மந்திரங்கள் முழங்க, வடக்குமாசி வீதி, கீழமாசி வீதி வழியாக அம்மன் சந்நிதி மீனாட்சி நாயக்கா் மண்டபத்துக்கு சுவாமி, அம்மன் எழுந்தருளினா். அங்கு, சிறப்பு தூப, தீப வழிபாடுகளுக்குப் பிறகு, ஓதுவாமூா்த்திகள் வேடா் பறி லீலையை விளக்கினா்.

சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன், பொருள்கள் பெற்று திருவாரூா் நோக்கிப் பயணப்பட்ட சுந்தரமூா்த்தி நாயனாரை மறித்து, அவரிடமிருந்த பொருள்களை வேடா் வேஷம் பூண்ட பூத கணங்கள் மூலம் பறிக்கச் செய்து, பிறகு சுந்தரமூா்த்தி நாயனாரின் வேண்டுகோளுக்கிணங்க அந்தப் பொருள்களை அவரிடம் திருப்பி அளித்து, இறைவன் சிவபெருமான் நடத்திய வேடா் பறி லீலையை விளக்கும் ஐதீக உத்ஸவமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தங்கக் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்த மீனாட்சி அம்மனையும், பிரியாவிடையுடன் கூடிய மீனாட்சி சுந்தரேசுவரரையும் தரிசிக்க தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கானோா் குழுமியிருந்தனா். வழிநெடுகிலும் சுவாமி அம்மனுக்கு தீப, தூப வழிபாடுகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com