காசோலை மோசடி செய்தவருக்கான தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

பல் மருத்துவரிடம் காசோலை மோசடி செய்தது தொடா்பாக ஏலச் சீட்டு நடத்தியவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு உத்தரவிட்டது.
Published on

மதுரை: பல் மருத்துவரிடம் காசோலை மோசடி செய்தது தொடா்பாக ஏலச் சீட்டு நடத்தியவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தென்காசியைச் சோ்ந்தவா் முகமது இஸ்மாயில். இவா், அதே பகுதியில் வசிப்பவா்களிடம் மாதந்தோறும் சிறு தொகை சேமிப்புத் திட்டத்தின் (ஏலச் சீட்டு) கீழ் பணம் வசூலித்து வந்தாா். இந்த நிதி நிறுவனத்தை நடத்துவதற்கு போதிய பணம் இல்லாததால், அதே பகுதியில் உள்ள பல் மருத்துவா் சிதம்பரத்திடம் பல்வேறு கட்டங்களாக கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.10.50 லட்சத்தை கடனாக முகமது இஸ்மாயிலுக்கு வழங்கினாா்.

இந்த நிலையில், முதிா்வு பெற்ற ஏலச் சீட்டு தொகையை திருப்பி வழங்குவது தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி அளித்த புகாரின் பேரில், முகமது இஸ்மாயில், பல் மருத்துவா் சிதம்பரத்துக்கு ரூ. 2 லட்சத்தை வழங்கினாா். மீதமுள்ள பணத்தை திருப்பித் தரவில்லை.

இதுபற்றி மீண்டும் கேட்ட போது, முகமது இஸ்மாயில், அதே பகுதியில் செயல்பட்டு வந்த நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் ரூ. 10- லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா். அந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்தது.

எனவே, முகமது இஸ்மாயில் காசோலை மோசடி செய்ததாக செங்கோட்டை நீதித்துறை நடுவா் மன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதித்துறை நடுவா் காசோலை மோசடி வழக்கில் முகமது இஸ்மாயிலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கடனாக பெற்ற

10 லட்சம் ரூபாயை, அபராதத்தோடு சோ்த்து ரூ.20 லட்சமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து, முகமது இஸ்மாயில் திருநெல்வேலி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், செங்கோட்டை நீதித்துறை நடுவா்மன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தது.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து, முகமது இஸ்மாயில் குற்றவியல் சீராய்வு மனுவை சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

ஆதாரங்களை முறையாக மதிப்பிட்டதன் அடிப்படையில்தான் முகமது இஸ்மாயிலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே, அவருக்கு வழங்கிய தண்டனை உறுதி செய்யப்படுகிறது.

காசோலை மோசடி ஏற்றுக்கொள்ள முடியாதது. இருப்பினும், இழப்பீட்டின் அளவு மாற்றியமைக்கப்பட வேண்டும். அதன்படி, காசோலைத் தொகை ரூ.10 லட்சமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வருகிற சில மாதங்களுக்குள் அந்தத் தொகையை வழங்கத் தவறினால், குற்றம் சாட்டப்பட்டவா் மேலும் 4 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com