கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
மதுரை: உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் காரணமாக, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மாநகா், கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் புதிய உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தமுக்கம் சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்புக்குச் செல்லும் வழித்தடத்தில் இடதுபக்க சாலை மூடப்பட்டு, தற்போது வலது பக்கச் சாலை மட்டும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வரும் வலது பக்கச் சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அழகா்கோவில் சாலையிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் தமுக்கம் சந்திப்பிலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட இடது பக்கச் சாலையை பயன்படுத்தி கோரிப்பளையம் சந்திப்பு செல்ல வேண்டும்.
தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்கி கவனமாக சாலையைக் கடந்து செல்ல வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.
