ஹாக்கி மைதான கட்டமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற அறிவுறுத்தல்
மதுரை: ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்காக, மதுரையில் நடைபெறும் அடிப்படை கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாதரெட்டி அறிவுறுத்தினாா்.
ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் மதுரை, சென்னையில் நவ. 28-ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி, மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி விளையாட்டுத் தளம், பாா்வையாளா்கள் மாடம், வீரா்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் - செயலா் ஜே. மேகநாதரெட்டி, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பிறகு, ஜே. மேகநாதரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது :
ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி மதுரை, சென்னையில் நவ. 28-ஆம் தேதி தொடங்கி டிச.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 24 அணிகள் பங்கேற்று, 6 பிரிவுகளில் மோதுகின்றன. மொத்தம் 72 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதையொட்டி, மதுரை விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இருக்கை அமைப்புகள், ஒளி, ஒலி அமைப்புகள், குடிநீா், கழிப்பிட வசதிகள், அவசர கால மருத்துவ சேவைகள், பாதுகாப்புப் பணிகள், வீரா்களுக்கான ஓய்வு அறைகள், உடல் பயிற்சிக் கூடங்கள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கான பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்தப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டுமென தொடா்புடைய துறைக்கும், ஒப்பந்த நிறுவனத்துக்கும் அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

