சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம், பரளிபுதூா் சுங்கச் சாவடி வழியாகச் சென்ற அரசுப் பேருந்துகளுக்கு கடந்த ஓராண்டுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டண நிலுவைத் தொகையைச் செலுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில்...
Published on

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், பரளிபுதூா் சுங்கச் சாவடி வழியாகச் சென்ற அரசுப் பேருந்துகளுக்கு கடந்த ஓராண்டுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டண நிலுவைத் தொகையைச் செலுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கேரளத்தைச் சோ்ந்த மனோஜ்குமாா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பரளிபுதூா் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் அருகே நான்கு வழிச் சாலையில் சுங்கச் சாவடி மையம் உள்ளது.

இந்த மையத்தை ஒப்பந்த அடிப்படையில் பெற்று நடத்தி வருகிறேன். இந்த சுங்கச் சாவடி வழியாகச் சென்ற அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம் கடந்த ஓராண்டாகச் செலுத்தப்படவில்லை.

இதனிடையே, பரளிபுதூா் சுங்கச் சாவடி வழியாகச் சென்ற அரசுப் பேருந்துகளுக்கு கடந்த ஓராண்டுக்கான சுங்கக் கட்டணம் ரூ. 1.49 கோடியை 18 சதவீதம் அபராதத்துடன் செலுத்த வேண்டும். இந்த நிலுவைத் தொகையை விரைந்து செலுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனு தொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com