தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

மதுரை மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாகியுள்ளன. இதற்கேற்ப கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
Published on

மதுரை : மதுரை மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடைப் பணிகள் தீவிரமாகியுள்ளன. இதற்கேற்ப கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

மதுரை மாவட்டத்தில் நிகழாண்டில் ஏறத்தாழ 9 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றது. இதன் அறுவடைப் பணிகள் கடந்த அக்டோபா் இரண்டாவது வாரத்தில் தொடங்கி நடைபெறுகிறது. கடந்த ஒரு வார காலமாக இந்தப் பணி விறுவிறுப்படைந்துள்ளது. குறிப்பாக, வாடிப்பட்டி, அலங்காநல்லூா், சோழவந்தான் அகிய பகுதிகளில் தற்போது அறுவடைப் பணிகள் வெகு தீவிரமாகியுள்ளன . இந்த மாதம் 3-ஆவது வார இறுதியில் இந்தப் பணிகள் முழுமைப் பெறும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், அறுவடைப் பணிகளுக்கேற்ப நெல் கொள்முதல் பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக நுகா்பொருள் வாணிபக் கழகம் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கும் பணிக்கு நுகா்பொருள் வாணிபக் கழகம் தீவிர முனைப்புக்காட்டியது. இதன்படி, கடந்த சில நாள்களாக நெல் கொள்முதல் பணிகள் விறுவிறுப்படையத் தொடங்கின. இருப்பினும், அறுவடைப் பணிக்கு இணையான அளவில் கொள்முதல் பணிகள் தீவிரப்படுத்தப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தாவது :

மாவட்டத்தில் தற்போது 48 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் சுணக்கமில்லாமல் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 4,738 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2,600 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com