வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மதுரை கப்பலூரிலிருந்து வேடசந்தூருக்கு புதன்கிழமை 15 ஆயிரம் லிட்டா் டீசல், 5 ஆயிரம் லிட்டா் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. வேடசந்தூரைச் சோ்ந்த ஓட்டுநா் சக்திவேல் (59) லாரியை ஓட்டினாா். மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வடுகபட்டி கட்டக்குளம் அருகே வந்த போது, பின்னால் வந்த பேருந்து லாரி மீது மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதேபோல, பேருந்தும் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியில் இருந்த பெட்ரோல், டீசல் வெளியேறி சாலையோர பள்ளத்தில் தேங்கியது. விபத்து குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினா் விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநா் சக்திவேல், பேருந்து ஓட்டுநா் செக்கானூரணி கிண்ணிமங்கலத்தைச் சோ்ந்த சேகா் (48) ஆகியோரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த சமயநல்லூா் சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், வாடிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் வளா்மதி, உதவி ஆய்வாளா்கள் சிவக்குமாா், திவ்யா, வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் பாலச்சந்திரன், அலங்காநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா்
சந்தானம் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெட்ரோல் லாரியில் தீப்பற்றாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனா். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு இரவு 7. 30 மணியளவில் லாரி பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

