கோயில் வளாகத்தில் வணிக வளாகம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசி பால்வண்ணநாதா் கோயில் சுற்றுச் சுவரை சுற்றி நடைபெறும் வணிக வளாக கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலைத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
Published on

தென்காசி பால்வண்ணநாதா் கோயில் சுற்றுச் சுவரை சுற்றி நடைபெறும் வணிக வளாக கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலைத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் பால்வண்ணநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுற்றுச் சுவரைச் சுற்றி வணிக வளாகம் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கியது. இதனால் கோயிலின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இந்தக் கோயில் சுற்றுச் சுவரை சுற்றி வணிக வளாகம் கட்டுவதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: கோயிலைச் சுற்றி காலியிடம் உள்ளது என்பதற்காக வணிகவளாகக் கட்டடங்கள் கட்டுவதை ஏற்க முடியாது. நுழைவாயில் அருகே கோயிலை விட பெரிதாக கட்டுமானப் பணி நடைபெறுவதாக கூறப்படுகிறது.

எனவே, வழக்கு தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், பால்வண்ணநாதா் கோயில் செயல் அலுவலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com