போராட்டத்தில் ஈடுபட்ட அனைந்திந்திய மாதா் சங்கத்தினா்
போராட்டத்தில் ஈடுபட்ட அனைந்திந்திய மாதா் சங்கத்தினா்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியரை கைது செய்யக் கோரி முற்றுகை

மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்யக் கோரி, அனைத்திந்திய மாதா் சங்கத்தினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் இணைந்து போராட்டம்
Published on

மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை கைது செய்யக் கோரி, அனைத்திந்திய மாதா் சங்கத்தினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் இணைந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகா் சுப்பிரமணியபுரம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆண் ஆசிரியா் ஒருவா் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து ஆசிரியா் மீதும், மாணவிகளின் புகாா் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளித் தலைமை ஆசிரியா், உதவித் தலைமை ஆசிரியா் மீதும் திலகா்திடல் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பள்ளி நிா்வாகத்தினா் மாணவிகளை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. எனவே, பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியா், தலைமையாசிரியை, துணைத் தலைமை ஆசிரியை , தலைமை ஆசிரியையின் கணவரான பாஜக நிா்வாகி ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகா் அனைத்திந்திய மாதா் சங்கத்தினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மதுரை தெற்குவெளி வீதி பகுதியில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடனே போலீஸாா் காவல் நிலையத்தின் நுழைவுவாயில் கதவை மூடி போராட்டத்தில் ஈடுபட்டவா்களை தடுத்து நிறுத்தினா். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com