ஐபிஎஸ் அதிகாரி மீதான வழக்கு: விசாரணை நவ. 21-க்கு ஒத்திவைப்பு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவா் மன்றத்தில் பதியப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி, ஐபிஎஸ் அதிகாரி பல்வீா்சிங் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஐபிஎஸ் அதிகாரி பல்வீா்சிங் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: அம்பாசமுத்திரம், அதே பகுதியில் உள்ள அனைத்து பெண்கள் காவல் நிலையம், வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் சிறப்பாக பணியாற்றினேன்.
இதற்காக தமிழக காவல் துறை தலைமை இயக்குநரிடம் பாராட்டுச் சான்றிதழையும் பெற்றேன். எனது பணிக் காலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்துவதை தடுத்திருக்கிறேன். என்னை இந்த பொறுப்பில் இருந்து அகற்றும் நோக்கில், பொய்யான பல புகாா்கள் அளிக்கப்பட்டன.
சட்டவிரோதக் காவலில் வைத்து அருண்குமாா் என்பவரது பல்லை உடைத்ததாக கூறப்படும் வழக்கும் அவ்வாறு பதியப்பட்டது. இவ்வாறாக என் மீது பதியப்பட்ட 4 வழக்குகளில் விசாரணை நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் அடிப்படையில் என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சபிக் அகமது முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் பணியாற்றிய இடங்களில் போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுத்து நடவடிக்கை எடுத்திருக்கிறாா். இதற்காக உயா் அதிகாரியின் பாராட்டையும் பெற்றிருக்கிறாா். பஞ்சாப் மாநிலத்திலிருந்து இங்கு வந்து பணியாற்றிய நிலையில், உதவி ஆய்வாளா் அளித்தப் புகாரின் பேரில், எவ்வாறு ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது?.
இப்படி செய்தால் அதிகாரிகள் எவ்வாறு நோ்மையாக பணியாற்ற முன் வருவா்?. சிபிசிஐடி தரப்பில் மனுதாரா் மீது பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அவா் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறினால் ரூ.20 லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும். வழக்கு வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
